1.0 ஆராய்ச்சி செறிந்த நூல்களிலும் கட்டுரைகளிலும் அறிக்கைகளிலும் பட்டத்திற்காக அளிக்கப்படும் ஆய்வேடுகளிலும் பிற நூல்களிலிருந்து தகவல்களைக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. நூலாசிரியர்களும் பதிப்பாளர்களும் தகவல்களைத் தருவதற்கு வெவ்வேறு முறைகளைப் பின்பற்றுகிறபோது ஒருமித்த முறை உருவாகாமல் போகிறது. ஒருமித்த முறையை உருவாக்குவதற்கு இங்கே காட்டப்பட்டுள்ள அணுகுமுறை உதவும். பிற நூல்களிலிருந்து எடுக்கும் தகவல்களை மூன்று முறைகளில் குறிப்புகளாகத் தரலாம். தகவல்கள் கொடுக்க வேண்டிய பக்கத்தின் அடியிலேயே அவற்றைப் பற்றிய விவரங்களைத் தருவது ஒரு முறை. இது அடிக்குறிப்பு எனப்படும். பக்கங்களின் அடியில் தராமல் ஒரு பகுதியின் முடிவில் அல்லது நூலின் இறுதியில் அனைத்துக் குறிப்புகளையும் வரிசை எண்ணிட்டுத் தருவது மற்றொரு முறை. இது இறுதிக்குறிப்பு எனப்படும். (இதையும் அடிக்குறிப்பு என்று கூறுவதுண்டு). தகவல்கள் கொடுக்க வேண்டிய பகுதியிலேயே அடைப்புக்குறிக்குள் சுருக்கமாகக் குறிப்புகளைக் கொடுப்பது வேறொரு முறை. இது பிறை அடைப்புக்குறிப்பு எனப்படும். அடிக்குறிப்பிலும் இறுதிக்குறிப்பிலும் பிறை அடைப்புக்குறிப்பிலும் எடுத்தாண்ட நூல்கள், கட்டுரைகள் முதலியவை குறித்த எல்லா விவரங்களும் முழுமையாகத் தரப்பட்டிருக்காது. முழு விவரங்களும் நூலின் அல்லது கட்டுரையின் இறுதியில் உள்ள துணைநூற்பட்டியலில் இடம்பெறும். 1.1 அடிக்குறிப்பு, இறுதிக்குறிப்பு, பிறை அடைப்புக்குறிப்பு ஆகிய ஒவ்வொன்றையும் காட்டுவதற்கு வெளியான நூல்களிலிருந்து சில பக்கங்களை மாதிரிகளாகத் தந்திருக்கிறோம். (இந்தப் பக்கங்களில் காணப்படும் சொல்பிரிப்பு முறை, சந்தி, நிறுத்தக்குறிகள் முதலியவை இந்தக் கையேட்டில் கூறியிருக்கும் முறைகளோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். இந்தப் பக்கங்களை இங்கே காட்டியிருப்பதன் நோக்கம் மேற்கூறிய மூன்று தகவல் குறிப்புகளைக் குறித்த விளக்கங்களைத் தொடர்வதற்கே.) |