பக்கம் எண் :

63

   
2.62 தொட்டு

‘தொடங்கி’ என்னும் பொருளில் வரும்போது
முன் வரும் சொல்லுடன் சேர்த்து எழுத
வேண்டும்.

    (அ) அன்றுதொட்டு இன்றுவரை
    (ஆ) சென்னைக்கு வந்த நாள்தொட்டு

2.63 தோறும்

முன் வரும் சொல்லுடன் சேர்த்தே
எழுதப்படுகிறது.

    (அ) வெள்ளிதோறும் விடுமுறை
    (ஆ) ஆண்டுதோறும் இந்த விழா
    நடைபெறுகிறது.

2.64 நடு

அடுத்து வரும் சொல்லுடன் சேர்த்தே
எழுதப்படுகிறது.

    நடுக்கடலில்
    நடுச்சாமம்
    நடுவானில்
 
   
2.65 நடுவில், நடுவே

எல்லாச் சொற்களின் பின்னும் இவை
தனித்தே எழுதப்படுகின்றன.

    (அ) சாலை நடுவில் மின் கம்பம்
    (ஆ) ஊருக்கு நடுவே தெப்பக்குளம்
    (இ) முற்றத்தின் நடுவில் துளசிமாடம்
 
2.66 நெடு(ம்)

அடுத்து வரும் சொல்லோடு சேர்த்தே
எழுதலாம்.

    நெடுநாள்
    நெடுங்காலம்
    நெடுந்தூரம்