6.
சேர்த்து வைத்த குப்பை
‘சேர்த்து வைத்த குப்பை’ என்னும் தலைப்பைப் பார்த்ததும்
சிரிக்கலாம். உண்மையில் நான் பல ஆண்டுகளாய் சேர்த்து வைத்த
குப்பையே இது. எல்லாரும் ஒத்துழைத்துத் தமிழன்னையின் - நம்
பைந்தமிழ்ச் செல்வியின் - திருக்கோயிலில் பெருகிவரும் குப்பையை
வாரிப்போட்டுத் தூய்மைப்படுத்த வேண்டும்; தூசு படிந்த தமிழை மாசு
படியாது விளங்குமாறு செய்யவேண்டும்.
தமிழில் இன்று நடைமுறையில் மிகுதியாய்க் காணப்படும்
எழுத்துப் பிழைகளே இங்குச் ‘சேர்த்து வைத்த குப்பை’ என்னும்
தலைப்பில் குறிப்பிடப்பிடுகின்றன.
எழுத்துப் பிழைகளை நீக்க வழிகள்
எழுத்துப் பிழைகள் வாராமல் இருத்தற்குச் சில வழிகள்
இருக்கின்றன.
பிழையற்ற நூல்களைப் படித்தல் ஒன்று.
பொருள் நினைவோடு எழுதுதல் மற்றொன்று.
சொல்லின் பகுதி பார்த்து எழுதுதல் இன்னொன்று. அறை
என்பதற்குப் பகுதி, பகுதியாய் அறுக்கப்படுவது என்பது பொருள்.
கன்னத்தில் அறைவதும் இந்த அறையேதான்.
பொருளறிந்து எழுதினால் எழுத்துப் பிழைகள் ஏற்படா.
எழுத்துப் பிழை வாராதிருப்பதற்கு இங்கே காட்டும் வழிகளையும்
அறிந்து கொள்வது நல்லது.
|