உறழத் தோன்றும்’ என்று தொல்காப்பிய எழுத்ததிகாரமும், ‘கீழின்மூன்
வன்மை விகற்பமும் ஆகும்’ என்று நன்னூலும் விதி கூறுகின்றன.
இவ்விரு நூல்களும் இருவகையாகவும் எழுதலாம் என்று கூறுகின்றன.
ஆனால், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பதினெண் கீழ்க்கணக்கு
என்றே எழுதியுள்ளதைக் காண்கிறோம். கிழக்கு என்னும் சொல்லும்
திசை என்னும் சொல்லும் சேரும் போது கீழ்த்திசை என்றே வரும்.
"கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்" என்று சிலப்பதிகாரக்
கட்டுரைகாதை 182 ஆவது வரியில் கீழ்த்திசை என
வந்திருப்பது காண்க.
எழுத்துகள் என்பது சரியா, எழுத்துக்கள் என்பது சரியா என்பது
குறித்து இருவேறு கருத்துகள் உண்டு. எழுத்துக்கள் என்பதே
சரியானது. வாக்குக்கள், வாழ்த்துக்கள் எடுத்துக்காட்டுக்கள்,
இனிப்புக்கள், விளையாட்டுக்கள், விளக்குக்கள் என்பவை கேட்க
இனியனவாய் இருக்கின்றனவா? இல்லையே. மேலும் விகுதிப்
புணர்ச்சியில் வல்லெழுத்துக்குப் பின் வரும் வலி மிகுவதற்கு
விதியும் இல்லை.
வலி மிகுதலும் மிகாமையும் என்பதைப் பற்றிய இப்பகுதியானது
தலைவலியை மிகுத்து விட்டதோ என்று அஞ்சுகிறேன். நல்ல தமிழில்
எழுத இஃது இன்றியமையாததாக இருத்தலால், ஆழ்ந்து போக
வேண்டியதாயிற்று. நல்ல தமிழ் எழுதுவதற்காகச் சிறிது பொறுத்துக்
கொள்ளக் கூடாதா?
|