பக்கம் எண் :

வலிமிகும் விதிகளின் தொகுப்பு 221

மாண்புறத் தமிழ் வளர்த்த மதுரையில் மட்டுமல்லாமல், தமிழ்
நாட்டில் இருக்கும் பல இடங்களிலுமுள்ள அறிவிப்புப் பலகைகளிலும்
ரயில் நிலையங்களிலும் நாளிதழ்களிலும் வேறு வெளியீடுகளிலும்
இத்தகைய பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இப்படிப் பிழைகள்
மலிந்து கிடக்குமாயின். தமிழ் நாட்டில் நல்ல தமிழ் எப்படிப் பரவ
முடியும்? மேலே குறிப்பிடப்பட்ட தவறுகள் வல்லெழுத்து மிகாத
பிழைகளாகும். வார, நாள் இதழ்களிலும் பெரும்பாலான நூல்களிலும்,
புதியனவாக வருகின்ற பல கவிதைகளிலும் காணப்படுகின்ற எழுத்துப்
பிழைகள், சொற் பிழைகள், வாக்கியத்தவறுகள், ஒருமை பன்மைத்
தவறுகள், குறியீட்டுத் தவறுகளான இவைகளைப் பற்றிச் சொல்ல
வேண்டுவதே இல்லை. இந்த நிலையில் ஒரளவு கூட இலக்கணம்
கற்க வேண்டுவதில்லை எனச் சிலர் கூறி வருவது வியப்பாயிருக்கிறது.
ஆங்கில நாளிதழ்களிலும் வெளியீடுகளிலும் அளவற்ற தவறுகளைக்
காண்பதில்லை. ஏன்? ஆங்கில மொழித்தேர்ச்சியுடையவர்களே
நாளிதழ்களை நடத்துவதனாலும் நாளிதழ்களுக்குச் செய்தி திரட்டி
அனுப்புகிறவர்களும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்கும்
காரணத்தினாலும் ஆங்கில நாளிதழ்களில் பெரும்பாலும் அளவுக்கு
மிக்க தவறுகளைக் காண்பது அரிதாகிறது. தமிழில் நாளிதழ்
நடத்துபவர்களும் ஓரளவு மொழித் தேர்ச்சி பெற்று விட்டால்,
இக் குறைகள் விரைவில் நீங்கும். எல்லாவற்றிற்கும் மேலாகத்
தமிழாட்சி மொழியைப் பயன்படுத்தும் அலுவலர்கள் ஒரளவு மொழித்
தேர்ச்சி பெற்று விட்டால், இன்று பிழையாகவே எழுதும் இழிநிலை
நாளடைவில் அடியோடு அழிந்தொழியும்.

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் எதையும் நல்ல தமிழில்
எழுத வேண்டிய இன்றியமையாமை இன்று நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆதலால், அலுவலக எழுத்தர்கள் தமிழை வழுவின்றி எழுதப் பயின்று
கொள்ள வேண்டும் என்றறிக. நாளிதழ் ஆசிரியர்களும் பிறரும் இனிப்
பிழையின்றித் தமிழை எழுதினால்தான் மதிப்புப் பெறக்கூடும் என்று
உணர்வார்களாக.