பக்கம் எண் :

222நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

முன்னே குறிப்பிடப்பட்ட பிழைகளுக்கு உரிய திருத்தங்களைக்
கீழே காண்க.

கரிக்கடை என்றிருக்க வேண்டும். கரியை விற்கும் கடை என்பது
பொருள். இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையில் வரும் வல்லெழுத்து மிகுந்த வரும் என்பது விதி.

வாடகைக்குக் கிடைக்கும், திருமதி சுப்பராவுக்குப் பாராட்டு,
இலங்கைக்குச் சட்ட விரோதமாக, மதுரைக்குத் திருப்பியனுப்பப்படுவர்.
நான்காம் வேற்றுமை ‘கு’ உருபுக்குப் பின் வரும் வல்லெழுத்து மிக
வேண்டும்.

பண்பாட்டைக் கடைப் பிடித்து, ஆள்களைக் கடத்தும், ஒன்றைப்
புதிதாக, பதிலைத் தெரிவிக்குமாறு, நிகழ்ச்சிகளைப் பற்றி - இங்கே
இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ உருபுக்குப் பின் வரும் வல்லெழுத்து மிக
வேண்டும் என்பது விதி.

விலை குறைவாய்க் கிடைக்கும், அதிகமாகக் காயங்கள், தவிரத்
தற்காப்பு, அதற்கேற்பப் போதிய, நுணுக்கமாகத் திட்டத்தை, செய்ய
வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். - ஆய், ஆக, என என்று
வரும் வினையெச்சங்களின் பின்னும், அகர ஈற்று வினையெச்சங்களின்
பின்னும் வரும் வல்லெழுத்து மிக்கு வரவேண்டும் என்பது விதி.

அமைப்புப் பற்றிப் பேச, முடிவுபற்றிப் பாகிஸ்தான், பேசிக்
காரியங்களை, கிழக்கு நோக்கிப் பாயச் செய்ய. - இகர ஈற்று
வினையெச்சத்துக்குப் பின்னும் வரும் வல்லெழுத்து மிக வேண்டும்.

எந்தச் சமுகத்தையும், அந்தத் துறைகளில், இந்தப் பதிலை. -
அந்த, இந்த, எந்த என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லெழுத்து
மிகும்.