பக்கம் எண் :

வலிமிகும் விதிகளின் தொகுப்பு 223

அமைப்புப்பற்றி, தெரிவித்துக் கொள்ள, குறித்துப் பிரெஞ்சு
உதவி, நேற்றுப்பகல். - வன்தொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின்
வரும் வல்லெழுத்து மிகும்.

இங்குச் செய்யக்கூடியது - அங்கு, இங்கு, எங்கு என்னும்
சொற்களுக்குப் பின் வரும் வல்லெழுத்து மிகும். இச்சொற்களுக்குப்
பின் வரும் வல்லெழுத்து மிகாது எழுதுகின்றனர் பலர். அங்கு, இங்கு,
எங்கு என்னும் சொற்களுக்குப் பின் கட்டாயம் வல்லெழுத்து மிக
வேண்டும்.

வங்காளத் தொழிலமைச்சர், தற்காலக் கல்வி, இலங்கைக்
கண்காணிகள், இடைக்காலப்பதில், தீப் பெட்டித் தொழிற்சாலை,
சென்னைக் கடற்கரை, சென்னைக் கிரிக்கெட் கழகம். - உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில் வரும் வல்லெழுத்து மிக வேண்டும்
என்பது விதி.

தீ + பெட்டி = தீப்பெட்டி. ஒரெழுத்து ஒரு மொழிக்குப்பின்
வல்லெழுத்தில் சொல் வந்தால் வலி மிகும். ஓரெழுத்தே பொருள்
குறிப்பது ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். தீ என்பது ஓரெழுத்து
ஒரு மொழியாகும்.

இலக்கணம் முழுவதையும் படித்து நினைவில் வைத்துக்
கொண்டு வல்லெழுத்து மிகும் இடத்தையும், மிகாத இடத்தையும்
உணர்வது கடினமாயிற்றே என்று பலர் அஞ்சுகின்றனர்; அஞ்ச
வேண்டுவதில்லை. பிழையற எழுதும் தமிழறிஞர்களின் நூல்களைப்
படிப்பதாலும், இவ்விதிகளைத் தெரிந்து கொள்வதாலும் ஒருவர்
பிழையின்றி எழுத எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

வலி மிகும் விதிகளின் தொகுப்பு

சிதறிக்கிடக்கும் வலிமிகும் விதிகள் எல்லாம் இங்குத் தொகுத்துத்
தரப்பட்டுள்ளன. இத்தொகுப்பு, படித்த விதிகளை உள்ளத்தில் தள்ள
முடியாதவாறு பிடித்து நிறுத்தப் பயன்படும்.