பக்கம் எண் :

உரைநடை வரலாறு25


புராண உரைநடை நூல்களும், சபாபதி நாவலர் இயற்றிய
திராவிடப் பிரகாசிகையும் உரைநடை வளர்ச்சிக்கு உறுதுணை
செய்தன. பின்னர் வேதநாயகம் பிள்ளை, வி.கோ.
சூரியநாராயண சாஸ்தியார், செல்வக்கேசவராய முதலியார்,
மாதவய்யர், கா.ரா. நமச்சிவாய முதலியார், மறைமலை
அடிகள், திரு.வி.கலியாண சுந்தரனார், டாக்டர் உ.வே.சாமிநாத
அய்யர் முதலியவர்களும் உரைநடையை வளர்த்தார்கள்.

‘ஜனவினோதினி’ என்ற திங்கள் இதழ் 1874 முதல் 1889
வரையில் பல அறிவியல் கட்டுரைகளைத் தாங்கி நடைபெற்றது.
இஃது அறிவியல் கட்டுரைகளை அக்காலத்துக்கு ஏற்ற முறையில்
எழுத வழி காட்டியது.

20-ஆம் நூற்றாண்டில் பல நாளிதழ்களும் வார, மாத
வெளியீடுகளும் உரைநடையை வளர்த்தன. இன்று தமிழ்
உரைநடை வளர்ந்து கொண்டு வருகிறது; இனியும் வளர
வேண்டும்.

ஆங்கிலத்தில் உரைநடை வளர்ச்சி

ஆங்கிலத்தில் உரைநடை கி.பி.10-ஆம் நூற்றாண்டில்
தோன்றி, 16-ஆம் நூற்றாண்டில் பேக்கன் என்பவரால்
வளர்ச்சியுற்று, 18-ஆம் நூற்றாண்டில் சுவிப்ட், அடிசன்
போன்ற எழுத்தாளர்களால் பெருகி, 19-ஆம் நூற்றாண்டில்
ரஸ்கின், மார்லி போன்றவர்களால் சீரும் சிறப்பும் பெற்று,
இன்று நல்ல நிலைமை அடைந்துள்ளது. அது போன்று
தேனினும் இனிய தீந்தமிழ் மொழியையும் நல்ல உரைநடை
நூல்களினால் வளம் பெறச் செய்ய வேண்டுவது நமது
கடமை. அதற்காக நல்ல தமிழ் எழுதப் பழகுவது
இன்றியமையாதது என்பதறிக.