|
எனக
எனக் கி.பி.12ஆம் நூற்றாண்டினரான நன்னூலார் மிகைபடக்
கூறியதும் வழுவுற்றதே.
தமிழையும் அதன் இனமொழிகளையும் மொத்தம் பதின்மூன்றென
முதன்முதற் கால்டுவெல் கண்காணியார் குறித்தனர். இன்று அமெரிக்கப் பேராசிரியர் எமனோவும்,
ஆங்கிலப் பேராசிரியர் பரோவும் அவற்றைப் பத்தொன்பதாகக் காட்டினர். இத் துறையாராய்ச்சியைத்
தொடங்கி வைத்த கால்டுவெலார் காலத்தில், தமிழை அதன் இனமொழிகளினின்று பிரித்துணருந் தேவையே
யின்மையால், அவர் அவ் விரு பாலையும் திராவிடம் என்னும் பொதுப்பெயராற் குறித்துப் போந்தார்.
இன்றோ, இவ் வாராய்ச்சி மிகுந்து தமிழரும் ஆழ்ந்து ஈடுபட்டுத் தமிழின் தனித்தன்மையைத் தெளிவாய்
உணர்ந்திருப்பதாலும் மொழிவாரிப் பைதிர (மாகாண)ப் பிரிவினால் தென்னாட்டுத் தமிழினப்
பெருமொழிகள் நில வகையிற் பிரிந்து போனமையாலும், இந்தியைப் பொதுமொழியாய் ஏற்றுக்கொள்வதுபற்றித்
தமிழர்க்கும் ஆந்திர கன்னட மலையாளியர்க்கும் நேர்மாறான நிலைமை வேறுபாடிருப்பதாலும், தமிழை
அதன் இனமொழிகளினின்று பிரித்துச் சுட்ட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழைத்
தமிழ் என்றும், அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும், இவ் விருபாலையும் பொதுப்படத் தென்மொழி
என்றும் கூறுவதே இனித் தக்கதாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாடு தொன்று தொட்டு
வழக்கிலிருந்து வருவதாலும், செந்தமிழினின்று திரிந்த கொடுந் தமிழ் மொழிகளைத் தமிழ் என்னும்
செந்தமிழ்ச் சொல்லின் திரிபான திரவிடம் என்னும் திரிசொல்லாற் குறிப்பதே தக்கதாமாதலாலும்,
வட இந்திய மொழிகளையெல்லாந் தழுவும் வடமொழியென்னும் பெயர்போல் தென்னிந்திய மொழிகளையெல்லாந்
தழுவுவது தென்மொழி என்னும் பெயரேயாதலாலும், தமிழ், திரவிடம், தென்மொழி என்னும் முப்பெயர்க்கும்
பகுத்தொதுக்கிய பொருட்பாடு எல்லா வகையிலும் ஏற்றுள்ளமையறிந்து கடைப்பிடிக்க.
- “தென்மொழி” பிப்பிரவரி 1963
|