பக்கம் எண் :

தமிழர் மதம் 103

New Page 1
     "அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
      செந்தழ லோம்பிமுப் போது நியமஞ்செய்
      தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
      சந்தியு மோதிச் சடங்கறுப் பார்களே"
 
     "பெருநெறி யான பிரணவ மோர்ந்து
      குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
      திருநெறி யான திருகை யிருத்திச்
      சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே"

என்பவற்றைக் கணேச பண்டிதரும்,

     "சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
      உவமா மகேச ருருத்திர தேவர்
      தவமால் பிரமீசர் தம்மிற்றாம் பெற்ற
      நவவா கமமெங்கள் நந்திபெற் றானே"

என்பதைச் சுவாமிநாத பண்டிதரும், திருவாசகம் தேவாரம் முதலிய பிற பனுவற் செய்யுள்களைப் பிறரும், தம் கொள்கைக்குச் சான்று காட்டிப் பயனில்லை.

    "மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்" என்று சிறப்புப் பாயிரம் கூறுவதால், திருமந்திர மண்டிலங்கள் (விருத்தங்கள்) மொத்தம் மூவாயிரமே. வே. விசுவநாதப் பிள்ளை பதிப்பில் 3047 மந்திரங்கள் உள்ளன. சை. சி. நூ. ப. கழகப் பதிப்பில் மூவாயிரமே உள்ளன. அவற்றுள், "அவிழ்க்கின்ற வாறும்," "அந்தண ராவோர்" என்னு மிரண்டும் இடம்பெறவில்லை. அவை இடைச்செருகல் போலும்!

    "வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்......"

     "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்............"

என்னும் சிவஞான முனிவர் கூற்றுகள் இக்காலத்திற் கேற்கா. வடமொழிக்கு மூலம் தென்மொழி யென்பதை, இந் நூலின் முடிபுரையியலில், 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.

     "மன்னு மாமலை மகேந்திர மதனிற்
      சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"

என்று பாடினார், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிறுதியிற் பாண்டி நாட்டிற் பிறந்து வளர்ந்து, தமிழை முற்றக் கற்று, வரகுண பாண்டி யனின் தலைமை மந்திரியாரா யிருந்து, சிறந்த சிவனடியாராக மாறிய மாணிக்கவாசகர்.