பக்கம் எண் :

118தமிழர் மதம்

மக

மகிழ்ச்சியைப் பெற முடியாவாறு, வடநாட்டினின்று வந்த பிரா மணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கித் தானே யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குத் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத் திலும்(Bank) வரியகத்திலும் பணஞ் செலுத்தியவர் திரும்புவதுபோல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை ஏமாற்றும் துணிச்சலுமான தீச் செயலாம்! ஆங்கிலப் பட்டக் கல்வியரும் அறிவியல் ஆராய்ச்சியாளரும் இதற்கு இணங்கியிருப்பது, எத்துணை இழிதகவான அடிமைத்தனமாம்!

    தமிழே திரவிடத்தாயும் ஆரிய மூலமுமாகும் என்னும் உண்மை, அண்ணிய காலத்திலேயே உலகறிய நாட்டப்படும். அதன் பிறகேனும், தமிழர் இருவகைச் சடங்குகளையும் கோவில் வழிபாட்டையும் தமிழிலேயே நடைபெறச் செய்தல் வேண்டும்.

    பொதுக்கூட்டங்களில், அவைத் தலைவர் 'அம்மையப்பன் திருவடி போற்றி!' என்றே ஒலிக்க. அவையினர் 'அரகர (அரவர) மாதேவா!' என்று ஆர்ப்பரிக்க.

2. பல்வகுப்புக் கோவிற் பூசகர்

    பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி, தமிழ்ப் பற்று, தெய்வ நம்பிக்கை, புலான் மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகிய எழுவகைத் தகுதியும் உள்ளவரை, எல்லா வகுப்பினின்றும் பூசகராகத் தெரிந் தெடுத்துப் பணியாற்றுவித்தல் வேண்டும். இதற்கு மாறாயிருப்பவரை அரசு தண்டித்தலும் வேண்டும்.

3. வழிபாட்டில் வீண்செலவு நிறுத்தம்

    கோவில்களிற் படைக்கப்படும் உணவுப் பொருள்கள், வழி படுவார்க்கும் பூசகர்க்கும் இரப்போர்க்கும் ஏழைகட்கும் பயன் படும். ஆயின், பால் முழுக்கு, நெய்யாட்டுப் போன்றவை ஒருவர்க் கும் பயன்படா. இறைவனுக்கும் ஏற்காது. மக்கட்டொகைப் பெருக்க மும் வேலையில்லாத் திண்டாட்டமும் பொருள்விலையுயர்வும் வறுமையும் வறட்சியும் மிக்க இக்காலத்தில், ஏழை மக்கள் குடிக்கக் கூழுமின்றிப் பசியும் பட்டினியுமாய்க் கிடந்து வருந்துகையிலும், தற்கொலை செய்து வருகையிலும், உயிரற்ற ஓருருவத்தின்மேற் குடங்குடமாய்ப் பாலைக் கொட்டுபவனை, இறைவன் அடியான் என்னாது கொடியான் என்றே கருதுவன். இறைவனுக்கு எண் ணில்லா எல்லாவுலகும் என்றும் சொந்தம். அவனுக்கு ஒரு பொரு ளும் தேவையில்லை. அவனே எல்லார்க்கும் எல்லாவற்றையும்