பக்கம் எண் :

தமிழர் மதம் 119

அள

அளிப்பவன். அவன் விரும்புவது மனம் ஒன்றே. அதை முழுமையும் அளிக்க முடியாதவர், பூசகர்க்கும் ஏழைகட்கும் பல்வகைப் பணிசெய்யும் பொதுமக்கட்கும் பயன்படுமாறு, தத்தமக்கு இயன்றவளவு பல்வகைப் பொருள்களைக் காணிக்கையாகப் படைக்கலாம்.


4. உருவிலா வழிபாடு
 

துறவறத்தார்க்கு மட்டுமன்றி, அறிவு விளக்கம் பெற்ற இல்லறத்தார்க்கும் உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழி பாட்டினால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப் படாதுபோம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக்கும் அது இழுக்காகும்.
 

உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்தது மாந்தனினம். ஆதலால், தலைசிறந்த  வகையிலும், மாந்தன் வடிவில்தான் இறை வனைக் காட்ட முடியும். அதுவே அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறிவில்லா யானை வடிவிற் படிவமமைத்து வணங்கு வது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத்தைத் தவறாக வரையின், அவருக்கு எத்துணைச் சினம் எழுகின்றது! மாந்தனுக்கே அங்ஙனமாயின் இறைவனுக்கு எங்ஙனமிருக்கும்!
 

கசினி மகமது கற்படிமைகளை யுடைத்துப் பொற்படிமை களை உருக்குவான்; சண்பகக்கண் நம்பி செப்புப் படிமையைத் திருடிக் காடு மேடாய் இழுத்துச் சென்று விற்பான், படிமை ஒன்றுஞ் செய்யாது.

 

     "விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில்
      நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் - மெள்ளவே
      ஆடெடுக்குங் கள்வரைப்போ லஞ்சா தெமைக்கரிசற்
      காடுதொறு மேயிழுத்தக் கால்."



    ஒருவனது தெய்வப் படிமையே அவன் வீட்டுப் படிக்கல்லாக வந்து அமையினும் அமையலாம்.


    இல்லற மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென்பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவிலா வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க.


    துறவறம் உயர்ந்த அறிவுநெறி யாதலால் பட்டினத்தாரும் தாயுமானவரும் போன்ற உண்மைத் துறவிய ரெல்லாம், உருவ வழி பாட்டை அறியாமைச் செயலாகவே கருதினர்.


    இறைவனுக்கு நெஞ்சக்கோயிலே இனியதென்று திருவள்ளு வரும் திருமூலரும் கண்டனர்.