பக்கம் எண் :

128தமிழர் மதம்

    சாய்-சாயை = சாயும் நிழல். சாய்கிறது என்பது வழக்கு. சாயை - . சாயா (chaya). நிழல் வடிவத்தையும் நிறத்தையும் குறிக்குமாதலால், சாயல், சாயம் முதலிய சொற்களும் தோன்றியுள்ளன.

    சாய் - சாயி = படுத்தவன், பள்ளிகொண்டான். சேஷசாயி = அரவணைத் துயின்றோன். தலை சாய்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய் - சயனம் = படுக்கை.

    சாய் - சா. விழுதலும் படுத்தலும் இறத்தலையுங் குறிக்கும். சா -சாவு - சவம். ஆள் சாய்ந்துவிட்டான் என்னும் வழக்கை நோக்குக.

    சில தென்சொற்களினின்று, ஒத்த பொருட்கரணியமுள்ள வேறொரு சொல்லையும் படைத்திருக்கின்றனர் வடமொழியாளர்.

எ-டு :

    சுள் - சுர் - சுரம் = சுடும் பாலைநிலம்.
    சுரம் - ஜ்வர = சுடும் காய்ச்சல் நோய்.

    சில தென்சொல் முதனிலைகளினின்று, ஏராளமான பூதுச் சொற்களைத் தோற்றுவித்துச் சமற்கிருதத்தைவளம்படுத்தியுள்ளனர்.

    எ-டு : பூ (முதனிலை). பூத்தல் = தோன்றுதல், உண்டாதல்,இருத்தல்.

     "பூத்தலிற் பூவாமை நன்று" (நீதிநெறி. 6)
   
     "பூத்திழி மதமலை" (கம்பரா. கும்பகர். 315)

 

    புகு - பொகு - பொகில் = அரும்பு.
   
    பொகில் - போகில் = அரும்பு.
   
    புகு - போ - போத்து = புதிதாய் வெடிக்கும் சிறு கிளை.
   
    பூ - பூது - பூதம் = தோன்றிய ஐம்பூதங்களுள் ஒன்று (any of the
     five elements
).

    பூ - bhu.  இதினின்றுதான் புவனம், புலி, பூதி, பூமி, பவம், பவனம், பவித்ரம், பவிஷ்யம், பாவம், பாவகம், பாவி, பாவனை, பாவிகம், அபாவம், அனுபவம், அனுபவி, அனுபூதி, உத்பவம், சம்பு, தத்பவம், ப்ரபு, ப்ரபாவம், பரிபவம், ஸம்பவம், ஸம்பாவிதம், ஸம்பாவனை, சுயம்பூ முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் பிறக்கும். தமிழர்க்கு எளிதாய் விளங்குமாறு இவை இங்கு  இயன்றவரை தமிழெழுத்தில் எழுதப் பட்டுள்ளன.

    சில தென்சொற்கள் திரிந்தும் முன்னொட்டுப் பெற்றும் உருமாறி வடசொற்களாகி யுள்ளன.

    எ-டு : ஆயிரம் - அஸ்ரம் - அஸ்ரம் - ஸகஸ்ர.