பக்கம் எண் :

தமிழர் மதம் 141

New Page 1

    கோவில் வழிபாடு அதற்குத் தகுதியுடைய எல்லாக் குலத்தா ரும் செய்யலாம், செய்விக்கலாம். தமிழ்நாட்டில் தமிழரே தமிழில் மட்டும் செய்வித்தல் வேண்டும். இங்ஙனமே ஆரியர் வருமுன் நடை பெற்று வந்தது.

    நீண்ட காலமாக இருந்துவந்த ஆரிய அடிமைத்தனத்தினால், அடிமைத்தனத்திலேயே பிறந்து அடிமைத்தனத்திலேயே வளர்ந்து, அடிமைத்தனமே எலும்புங் குருதியுமாக ஊறிப்போன தமிழரே பலர் தமிழ் வழிபாட்டை எதிர்க்கின்றனர். இதனால், தமிழ் வழி பாட்டையும், தமிழர் பூசகராவதையும் பிராமணர் வன்மையாக எதிர்க்கின்றனர். சிவகோசரியாரின் சமற்கிருத வழிபாட்டினும், கண்ணப்பனாரின் தமிழ் வழிபாடே சிவபெருமானுக்குச் சிறந்ததும் உகந்ததுமாயிருந்ததை யறிந்தும், இரு சாராரும் உணர்கின்றிலர். ஏனை நாடுகளின் நடப்பையும் இக்கால உரிமை வேட்கையையும் நோக்குகின்றிலர்.

    ஆரிய முறைப்படி நோக்கினும், பிராமணர் இன்று ஊர் காவல் துறையிலும், படைத்துறையிலும் ஆள்வினைத் துறையிலும் சேர்ந்து சத்திரியராயும், உழவுத்தொழில் செய்தும் உண்டிச்சாலை வைத்தும் வாணிகம் மேற்கொண்டும் வைசியராயும் கைத்தொழி லும் ஏவலும் செய்து சூத்திரராயும் மாறியுள்ளனர்.

    எது எங்ஙனமாயினும், பிராமணன் நிலத்தேவ னல்லன் என்பதும்; உலகியலிலும் மதவியலிலும் இல்லறத்திலும் துறவறத்தி லும், தமிழனுக்கில்லாத ஏற்றம் அவனுக்கு இம்மியும் இல்லையென் பதும், இதை உணராதவன் எத்துணைக் கற்றவனேனும் உருவத்தால் மாந்தனும் உள்ளத்தால் அஃறிணையுமாவனென்பதும்; தெரிதரு தேற்றமாம். ஆரியர் வெண்ணிறம் இன்று பொன்னிறமும் செந் நிறமும் புகர்நிறமும் கருநிறமுமாகமாறியுள்ளது. தமிழர் மொழி யாராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் செய்து உண்மையறிந்து கண்விழித்துக் கொண்டனர்.

3. பிராமணனுக்கு உரியது எவ்வறம்?

    அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக் காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்பன இல்வாழ்க்கை யறங்களாகத் திருக்குறள் மறையிற் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதன்மையானது விருந்தோம்பல்.

     "இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி  
      வேளாண்மை செய்தற் பொருட்டு." (குறள். 81)