பக்கம் எண் :

20தமிழர் மதம்

இன

    இன்றும், நீண்ட நாள் இடைவிடாது அடைமழை பெய்யும் போதும், கடும்பனிக் காலத்திலும், கள்வரச்சமும் கடுவிலங்கச்சமும் உள்ள இடத்தில் இராத் தங்கும்போதும், விழா நாள்களிலும், வேலை நெருக்கடியுள்ளபோதும், நோய் நிலையிலும், தூக்கம் வராதபோதும், கண்ணன்ன கேளிரைக் காண விரையும் நிலை யிலும், இரவிற் சவமுள்ள வீட்டிலும், கதிரவன் தோற்றத்தின்மீது வேணவாக் கொள்வது இயல்பாதலால், நாகரிகம் குன்றிய பண்டைக் காலத்தில் அது மிக்கே யிருந்திருத்தல் வேண்டும்.

      "கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ"

    என்னுங் கலித்தொகையடி, கதிரவன் வணங்கப்பட்டதைக் குறிப்பாக வுணர்த்தும். காவிரிப்பூம்பட்டினத்திற் கதிரவன் கோவில் இருந்தது.

      "உச்சிக்கிழான் கோட்டம்" (சிலப். 9 : 11)

     முற்றத் துறந்த முழு முனிவராகச் சொல்லப் பெறும் இளங்கோவடிகளே, தம் இயைபு வனப்புத் தொடக்கத்தில்,

      "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"

என்று மங்கல வாழ்த்துப் பாடினார்.

    உலக விளக்காக விருந்து உயிர்வாழ்க்கை நடைபெறச் செய்யும் கதிரவன், தீயின் கூறாக விருப்பதனாலும் பெருஞ்சிறப்புப் பெறு வதாயிற்று. அதனால், தெய்வப் பெயரினின்று கதிரவன் பெயரொன்றும் தோன்றிற்று.

      சுள்ளுதல் = எரிதல், காய்தல், சுடுதல்.
   
      சுள் - சுள்ளி = காய்ந்த குச்சு.
   
      சுள் - சுள்ளை = கலமுஞ் செங்கலும் சுடும் காளவாய்.

    சுள்ளை - சூளை.

    சுள்ளென்று வெயிலடிக்கிறது என்று, இன்றுஞ் சொல்லும் உலக வழக்கை நோக்குக.

    சுள் - வ. ஸு ஷ்.

    சுள் - சுர் - சுறு - சுடு - சுடல் - சுடலை.

    சுர் - சுரம் = சுடும் பாலை நிலம், உடம்பு சுடும் காய்ச்சல் நோய். சுரம் - வ. ஜ்வர.

    நெருப்பைத் தொட்டவர், சுரீர் என்று சுட்டுவிட்டதென்று இன்றுஞ் சொல்லுதலைக் காண்க.

    சுரம் - சுரன் = தீ வடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். சுரன் - வ. ஸு ர.