பக்கம் எண் :

தமிழர் மதம் 33

சிவன் படைக்கலம்

    முக்கவர்ச் சூலம். அதனாற் சிவனுக்குச் சூலி என்று ஒரு பெயர். கணிச்சியும்(மழுவும்) சிவன் படை. அதனால் அவனுக்குக் கணிச்சியான்(மழுவாளி) என்றும் பெயர்.

சிவனிருக்கை

    வீட்டுலகமும் வெள்ளிமலையும் திருக்கோவில்களும் தொண்டருள்ளமும்.

சிவன் குணம்

    தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என்னும் எட்டு.

     "பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
      உவமை யின்மை யொருவினை யின்மை
      குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்
      றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"

என்பது பிங்கலம்(2 : 6). பவம் (வ.) = பிறப்பு.

சிவன் தொழில்

    படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று.

சிவன் வடிவம் ஐ வகை

    (1) கொன்றைமாலை யணிந்து சூல மேந்திக் காளை யூர்ந்து செல்லும் செம்மேனியன்.

    (2) அம்மையப்பன்

    எல்லா வுயிர்கட்கும் தாய்தந்தை போன்றவன். வலப்புறம் தந்தைகூறும் இடப்புறம் தாய்கூறும் கொண்டதனால், மங்கை பங்கன் அல்லது மாதொரு பாகன் என்று சொல்லப்படுபவன்

     தந்தைகூற்றுப்பெயர் தாய்கூற்றுப் பெயர்
   
      சிவன் சிவை
   
      இறைவன் இறைவி
   
      தேவன் தேவி
   
      பரன் பரை
   
      அப்பன் அம்மை