பக்கம் எண் :

தமிழர் மதம் 63

இன

    இனி, தேவகணத்தாரென்று பதினெண் வகுப்பாருங் குறிக்கப் பட்டனர்.

     "அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்  
      கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர்  
      காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர்  
      பசாசர் அந்தரர் முனிவர் உரகர்  
      ஆகாய வாசியர் போக பூமியர்  
      பாகு பட்டன பதினெண் கணமே." (பிங். 2 : 92)
   
     "நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்  
      பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து  
      வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்." (5 : 176-8)

என்னுஞ் சிலப்பதிகார அடிகள் தமிழ வேந்தர் ஆரியர்க்கு அடிமைப்பட்டுப் போனதைக் காட்டும்.

    முல்லைநிலத்து முகில் தெய்வமாகிய மாயோன் வணக்கத் தினின்று திருமால் மதம் தோன்றியதுபோல், குறிஞ்சிநிலத்து முருகன்(சேந்தன்) வணக்கத்தினின்று சிவமதம் தோன்றியிருப்பினும், பொதுமக்கள் பண்டை முறையிலேயே முருக வணக்கத்தை இன் றும் போற்றி வருவதனாலும் அவன் இளைஞன் எனக் கொள்ளப் படுவதாலும் அவன் சிவன் மகனாக்கப்பட்டான்.

    முதன்முதற் சிவன் மகனென்றும் பிள்ளையார் என்றும் பெயர் பெற்றவன் முருகனே.

    கடைக்கழகக் காலத்திற் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்றொரு புலவ ரிருந்தார். அவர் தந்தை பெயராகிய கந்தப் பிள்ளை என்பது முருகன் பெயரே. புறப்பொருள் வெண்பா மாலைக் கரந்தைப் படல 21ஆம் வெண்பாவில் வரும் "வேன் முருகன்" என்னுந் தொகைச் சொற்கு, "வேலினை யுடைய பிள்ளையார்" என்று உரை வரைந்துள்ளார் சாமுண்டி தேவ நாயகர். நச்சினார்க்கினியரும், திருமுருகாற்றுப்படையுரை யில், முருகனைக் குறிக்கப் "பிள்ளையார்" என்னுஞ் சொல்லை ஆண்டிருக்கின்றார். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய விநாயகர்க்கு 'மூத்த பிள்ளையார்' என்னும் பெயர் ஏற்பட்டது வேடிக்கைச் செய்தியே. முருக வணக்கம், கி. மு. 10ஆம் நூற் றாண்டிற்கு முன்னரே, குமரிநாட்டுக் குறிஞ்சிநிலத்தில் தோன்றிய தென்பதை அறிதல் வேண்டும்.

    சேயோன் சிவன் என்னும் இரு சொல்லும் சிவந்தவன் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இரு வடிவமாயினும், நடைமுறை யில் அவை இருவேறு தெய்வங்களைக் குறித்தலாலும், சேய்