பக்கம் எண் :

தமிழர் மதம் 85

    சிவ மெய்ப்பொருள் ஐந்தும் தூய மாயையில் தோன்றின வென்பது, எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் இறைவனை ஐங் கூறிட்டதொடு, அவனை மாயையினின்று படைத்தது மாகின்றது.

    ஆண் பெண் பான்மையின்றி ஒரே தன்மையாய் ஆற்றல் வடிவா யுள்ள இறைவனை, பொதுமக்கட்கு அம்மையப்பனாகக் கூறிய அணி வகையை அறியாது, மாந்தரைப் போன்ற கணவனும் மனைவியுமாகக் காட்டி, தலையுங் காலுமில்லாத பல்வேறு கதை களைக் கட்டி, சொல்லளவாகவுள்ள சிவன் சிவைக்கு ஆண்டு தொறும் திருமணம் நடத்திவைப்பது, எத்துணைத் துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்!

    மாயை என்று ஒரு தனிப் பொருளில்லை. நாற்பூதமும் வெளியில் அணுக்களாக மறைந்து நிற்பதே மாயை. மாய்தல் மறைதல். மாய்-மாயை. ஒ.நோ: சாய் - சாயை = நிழல். மண்ணி னின்றே குடமும் மரத்தினின்றே பெட்டியும் ஆதல்போல், அழிப்புக் காலத்தில் அணுக்களாக ஒடுங்கி நின்ற நிலம் நீர் தீ வளி என்னும் நாற்பூதங்களே, படைப்புக் காலத்தில் மீண்டும் திரண்டு தோன்றும்.

    இடம் (வெளி), காலம், இறைவன் என்னும் மூன்றும், வேறு ஒன்றினின்றும் தோன்றாது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருள்களாம். காலம் கருத்துப் பொருளே.

    நில் - நிற்றம் - நித்தம் - வ. நித்ய. நித்தம் - நித்தல்.

     ஒ.நோ: வெல் - வெற்றம், கொல் - கொற்றம்.
   
  குற்று - குத்து. முற்றகம் - முத்தகம்.

    இடம் உண்மையின்(இருத்தலின்) தொடர்ச்சியே காலம். அது ஒரே தன்மையது. அழியும் பொருள்களை நோக்கியே இறப்பு நிகழ் வெதிர்வு என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவும் தட்பவெப்ப நிலை வேறுபாடும் பற்றியே சிறுபொழுதும் பெரும்பொழுதுமாகவும், அது பகுக்கப்படும். எதிர்வெல்லாம் நிகழ்வாகிப் பின்பு இறப்பாகிவிடும்.

    கால் போல் நீண்டு செல்வது காலம். கால் - காலை. கால் - காலம் - வ. கால.

     "காலம் உலகம் உயிரே உடம்பே  
      பால்வரை தெய்வம் வினையே பூதம்  
      ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்  
      ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன  
      ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்  
      பால்பிரிந் திசையா வுயர்திணை மேன" (தொல். 541)

என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக.