New Page 1
மேலேறி ஒரு கல் தொலைவு விரைந்தோடித்
திரும்பிப் பார்த்த போது, பிராமணக் கொலைப் பழிப்பேய் தொடராது நின்று விட்டது கண்டான்.
அவ்விடமாகிய திரிபுவனத்தில், தன் நடுக்கந் தீர்த்த சிவனுக்கு ஒரு சிறந்த கோவில் கட்டினான்.
இக் கதையை மெய்ப்பிக்கும்
பொருட்டாக, திருவிடை மருதூர்க் கோவில் திருவுண்ணாழிகைச் சுவரருகில் ஒரு துளையும், கீழை
வாயிற் பக்கத்தில் பிராமணப் பேயுருவும், கோவிற் கல்வெட் டுகள் சிலவும், இன்றும் உள்ளன.
எல்லாம் வல்ல இறைவனே பிராமணப்
பேய்க்கு அஞ்சிய போது, மாபெரு வேந்தராயினும் மக்கள் அஞ்சாதிருக்க முடியுமா?
நடுக்கந் தீர்த்தான் என்று பெயர்
பெற்றிருக்க வேண்டிய சிவன், கம்பஹரேசுவரர் எனப் பெயர் பெற்றது, ஈசுவர சிவா என்னும் பிராமணக்
குரவனின் வடமொழி வெறியாகும்.
கோவிற் களவு
தெய்வ வுடைமையாகிய திருக்கோவிற்
பொருள்களைத் திருடி விற்பதும் பயன்படுத்துவதும், கையாடுவதும் தீராத் தீவினை யாகக் கருதப்படும்.
திருப்பனந்தாட் கோவிலில்
வெள்ளித் தட்டைத் திருடிய பூசகனுக்கு, ஓரிரு நாள் வேலை நிறுத்தமே தண்டனையாக இடப்பட்டது.
தஞ்சாவூரையாண்ட விசயராகவ நாயக்கர்(கி.பி.
1633-73), தம் குடிகளின் சேமத்தைக் கருதி, நாள்தோறும் தாம் உண்ணுமுன் பன்னீ ராயிரம்
பிராமணருக்கு உண்டி படைத்து வந்தார். ஓராண்டு பன்னாள் விடாப் பெருமழை பொழிந்து எங்கும்
வெள்ளமாகி விட்டதனால், பிராமணருக்கு உண்டி சமைக்க விறகு கிடைக்க வில்லை. அதனால், அரண்மனையின்
ஒரு பகுதியை இடித்து, அதிலுள்ள உத்தரம், துலாக்கட்டை, கைமரம், சட்டம், கம்பம், நிலை, கதவு,
பலகணி முதலிய எல்லா மரவுறுப்புகளையும் வெட்டி யெரிக்க நாயக்கர் உத்தரவிட்டார். அவை தீர்ந்த
பின், பிராமண ரூண் தடையுண்ணாவாறு, அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பட்டாடைகளெல்லாம் எண்ணெயில்
தோய்த்து எரிக்கப்பட்டன.
இந் நிலையில், திருவரங்க
நாய்ச்சியாரின் விலை மதிக்க முடியாத வயிர மூக்குத்தி களவு போய்விட்டது. அங்குள்ள இடவகன்(ஸ்தானீகன்)
ஆன பிராமணப் பூசகன் திருடினானென்று அக் கோவி லதிகாரிகள் அவனை நையப் புடைத்தனர். அவன் அடி
தாங்காது நாயக்கரிடம் வந்து முறையிட்டான்.
|