அம்மான் மகளும் அத்தை மகளும்போல முறைகாரப் பெண்ணாயின் 'உரிமைப்பெண்' என்றும், வேறு செல்வர் வீட்டுப் பெண்ணாயின் 'பெருமைப் பெண்' என்றும் அழைப்பது வழக்கம். உரிமைப் பெண் இல்லாவிடத்தும் அவளை மணவாவிடத்தும், அயலிலேயே மணம் பேசப் பெறும். மணப்பேச்சு முன்காலத்தில் ஒரு தொல்லையான கலையாக இருந்துவந்தது. மணமகன் பெற்றோர், மணக்கத் தக்க ஒரு பெண்ணின் பெற்றோரிடம், வள்ளுவன் அல்லது கணியன் குறித்த நன்னாளில், பெரியோரை விடுப்பர். பெற்றோரும் உடன் செல்வதுண்டு. பெண் பேசச் செல்லும் போது, குறி (சகுனம்), நற்சொல் (வாய்ப்புள்), புள் (பறவைநிமித்தம்) முதலியன பார்த்தல் வழக்கம். பெண்ணின் பெற்றோர் தம் மகளைத் தர இசைந்தபின் மணமகன் வீட்டார் மணமகனுக்கும் பெண்ணுக்குமுள்ள பொருத்தங்களைக் கணிய (சோதிட) முறைப்படி பல்வேறு வகையிற் பார்ப்பர். அப்பொருத்தங்கள், பொதுவாக, (1) நாள் (நட்சத்திரம்) | (6) ஓரை (இராசி) | (2) கணம் | (7) கோள் (இராசியதிபதி) | (3) எண்ணிக்கை (மாகேந்திரம்) | (8) வசியம் | (4) பெண் நீட்சி (ஸ்திரீ தீர்க்கம்) | (9) இணக்கம் (வேதை) | (5) பிறவி (யோனி) | (10) சரடு (இரச்சு) | எனப் பத்து வகைப்படும். இப் பத்து வகையும் ஒருங்கே பெரும்பாலும் பொருந்துவதில்லை. அதனால், பல்வேறு பெண்ணை நாடிப் பல்வேறு ஊர்க்குச் செல்வது வழக்கம். இது மிகுந்த அலைச்சலையும் காலக் கடப்பையும் உண்டு பண்ணும். இதனாலேயே, "ஒரு மணத்திற்கு ஏழு செருப்புத் தேயவேண்டும்" என்னும் பழமொழி எழுந்தது. இனி, மேற் கூறிய பதின் பொருத்தத்துடன், வாழ்நாள், குறிப்பு (பாவகம்), மரம், புள், குலம் என்னும் ஐம்பொருத்தம் பார்ப்பதுமுண்டு. (2) மணவுறுதி (நிச்சயார்த்தம்) யாரேனும் ஒரு பெண்ணிடம் பதின் பொருத்தமும் அமைந்தி ருப்பின், அல்லது அமைந்திருப்பதாகச் சொல்லப்படின், உறுப்புக் குறையும் நோய்க் குற்றமும் இல்லாவிடத்து, மணமகன் வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒரு நன்னாளில் பெண்வீட்டில் பலரறிய மணவுறுதி செய்துகொள்வர். அவ் வுறுதிச் சடங்கை உறுதி வெற்றிலை (நிச்சய தாம்பூலம்) என்றும் அழைக்கலாம். மணவுறுதிச் சடங்கில், வெற்றிலைபாக்கு, குங்குமம், மஞ்சள் முதலியன வைக்கப்பட்ட ஒரு தட்டில், பெண்வீட்டார் கேட்ட பரிசப் பணமும், பெண்ணிற்கு ஒரு கூறையும் வைக்கப்பெறும். இரு வீட்டாரும் மணப்பெண்ணிற்கு அணியவேண்டிய அணிகளும், திருமணச் செலவில் ஏற்றுக்கொள்ளவேண்டிய பகுதிகளும், அன்றே பேசி முடிவு செய்யப்படும்.
|