பக்கம் எண் :

22

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்        
(20)
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென    
(25)
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி முகனிகுத்
தொய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்         
(30)
ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே."       
(அகம். 86)

   இதன் பொருள்

    1-4. உழுத்தம் பருப்பொடு சேர்த்துச் சமைத்த கொழுமையான    குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத்திரளையை உண்டல் இடை யறாது நிகழ, வரிசையான கால்களையுடைய குளிர்ந்த பெரிய பந்தற்கீழ்க் கொண்டுவந்து கொட்டிய மணலைப் பரப்பி வீட்டில் விளக்கேற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு.

    5-10. தீய கோள்களின் தொடர்பு நீங்கிய வளைந்த வெண்ணி லாவைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய சகடம் (உரோகணி) என்னும் நாள் அடைய, மிகுந்த இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற் காலையில், உச்சந்தலையிற் குடத்தையும் கையில் புதிய அகன்ற மொந்தையையும் உடைய, மணஞ்செய்து வைக்கும் ஆரவாரமுள்ள முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவற்றையும் பின்னே தருவன வற்றையும் முறைப்படி எடுத்தெடுத்துக் கொடுக்க,

    11-16. மகனைப் பெற்ற தேமலுள்ள அழகிய வயிற்றினையும் தூய அணிகளையும் உடைய மகளிர் நால்வர் கூடி நின்று, கற்பினின்றும் தவறாது பல நற்பேறுகளைப்பெற்று, உன் கணவன் விரும்பிப் பேணும் விருப்பத்திற் கிடமாகுக என்று வாழ்த்தி, நீரோடு சேர்த்துப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், அடர்ந்த கரியகூந்தலில் நெல்லோடு விளங்க,

    17. நல்ல வதுவை மணம் முடிந்த பின்பு.

    18-20. சுற்றத்தார் ஆரவார ஓசையுடன் விரைந்து வந்து, பெரிய மனைக்கிழத்தியாவாய் என்று சொல்லிச் சேர்த்து வைக்க, ஓர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில்,