பக்கம் எண் :

23

    21-26. முதுகை வளைத்துக் கோடிப் புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்த பக்கத்தைச் சார்ந்து, கட்டியணைக்கும் விருப்பத்துடன் முகத்தை மூடியிருந்த ஆடையை விலக்க, அவள் அச்சத்தோடு மூச்சுவிட்டபோது, உன் உள்ளம் நினைத்ததை ஒளியாது சொல் என்று பின்பு யான் கேட்டதினால், இனிய மகிழ்ச்சியோடு இருக்கையில்,

    27-31. மானின் மடத்தோடு செருக்கையுங்கொண்ட பார்வையையும் ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலையும் உடைய, அம் மாநிறத்தையுடையவள், சிவந்த மணிகள் பதித்த விளக்கமான திரண்ட காதணிகள் காதில் அசைய, உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியளாகி முகத்தைத் தாழ்த்தி என்னை விரைந்து வணங்கினாள்.

    2. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

"மைப்புறப் புழுக்கின் நெய்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்      
(5)
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை      
(10)
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி     
(15)
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமக் கீத்த தலைநாள் இரவின்
உவர்நீங்கு கற்பின்எம் உயிருடம் படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்    
(20)
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவுபெயர்த் திமைப்ப
மறைதிறன் அறியா ளாகி ஒய்யென        
(25)
நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீலிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறையொளித்தே"
(அகம்.136)