பண்டைத் தமிழ் மணம் என்று இங்குக் குறிக்கப்பட்டவை, தமிழகத்தில், தொன்றுதொட்டுப் பிராமணர் பெருந்தொகையாய் வந்து பலவூர்களிலும் தங்குமளவும், தமிழப் பார்ப்பாராலும் குலத்தலைவராலும் தமிழில் நடத்தப்பெற்று வந்த மணங்களாகும். பிராமணர் தென்னாடு புகத்தொடங்கியது ஏறத்தாழக் கி.மு. 2000 எனினும், அவர் முதலடியிலேயே பெருந்தொகையினராய் இங்கு வந்த வரல்லர். முதன்முதல் இங்குக் கால் வைத்த பிராமணர் விரல்விட்டு எண்ணத்தக்கவரே யாவர். கிறித்தவ வூழி தொடங்கும்வரை இடை யிட்டிடையிட்டுச் சிறுசிறு கூட்டத்தாராகவே அவர் வந்து கொண்டி ருந்தனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பின், பல்லவ அரசர் காலத்தில் தான், அவர் பெருவாரியாக வடநாட்டிலிருந்து குடியேற்றப்பட்டனர். இதைப் பிற்காலச் சேரசோழ பாண்டியரும் பின்பற்றினர். "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட" என்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப் பார்ப்பனப் புரோகிதத்தைக் குறித்திருப்பது, கடைச்சங்கக் காலத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் பெரும்பாலும் அரசரிடையும் வணிகரிடையும் இருந்த நிலைமையைத்தான் குறிக்கும். இன்றும் பிராமணரில்லாத பல நாட்டுப்புறத்தூர்கள் இருப்பதாலும், சில தமிழக்குலத்தார் பிராமணப் புரோகிதமின்றித் தம் மணங்களை நடத்திக்கொள்வதாலும், பிராமணர் வந்த பின்பும், கடைச்சங்கக் காலம் வரை பெரும்பால் தமிழர் மணங்கள் தமிழ் மரபிலேயே நடந்துவந்தன என்று அறிதல் வேண்டும். தமிழப்பார்ப்பார், பண்டாரம், புலவன், குருக்கள், திரு(க்கள்), பூசாரி, உவச்சன், ஓதுவான், போற்றி, நம்பி, அருமைக்காரன் (புடவைக் காரன்), வள்ளுவன் முதலிய பல்வேறு வகுப்பார் ஆவர். பார்ப்பான் கோயிற் கருமங்களைப் பார்ப்பவன். அந்தணன், ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழத் துறவியரையே குறித்ததுபோன்று, பார்ப்பான் என்னும் பெயரும் முதன் முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. துரை என்னும் தமிழ் அல்லது தெலுங்கச் சொல் நம் நாட்டில் தங்கும் மேனாட்டார்க்கு வரையறுக்கப் பட்டது போன்றே, அந்தணர், பார்ப்பார் என்னும் பெயர்களும் பிராம ணர்க்கு வரையறுக்கப்பட்டன என்க. இன்னும் இதன் விரிவையெல்லாம் எனது 'தமிழர்குல மரபு' என்னும் நூலிற் கண்டு கொள்க. தமிழருள், பார்ப் பார் என்பார் இல்லறத்தாரும், அந்தணர் என்பார் துறவறத்தாரும் ஆவர். |