குலத்தலைவராவார் நாட்டாண்மைக்காரன், நாட்டான், பெரிய தனக்காரன், அம்பலக்காரன், ஊர்க்கவுண்டன், ஊர்க்குடும்பன், பட்டக்காரன், ஊராளி, மூப்பன் என ஆங்காங்கு வெவ்வேறு பெயரால் அழைக்கப்பெறும் குலவியல் ஊராட்சியாளர். பண்டைத் தமிழ்மண முறையிலேயே இன்னும் பல மணங்கள் நடந்து வருவதால், அவற்றையுந் தழுவுமாறு 'பண்டைத் தமிழ் மணம்' என்னும் தலைப்பிற்குப் பண்டைக் காலத்தில் எல்லாத் தமிழரும் கையாண்ட மணமுறை என்று பொருள் கொள்க. (1) உலகியற் பாகுபாடு பண்டைத் தமிழ் மணங்களின் உலகியற் பாகுபாடு, பின் வருமாறு பல்வேறு முறை பற்றியதாகும். |
பண்டைத் தமிழ் மணங்கள், பெண்கோடல் முறைபற்றி, (1) கொடை மணம், (2) காதல் மணம், (3) கவர்வு (வன்கோள்) மணம் என முத்திறப்படும். (1) கொடைமணம் கொடைமணமாவது, மணமகனேனும் அவன் பெற்றோரேனும் மணமகள் பெற்றோரை அடுத்துக் கேட்க, அவர் கொடுப்பது. அது, (1) தானக் கொடை, (2) விலைக்கொடை, (3) நிலைப்பாட்டுக்கொடை என மூவகைத்து. தானக்கொடையாவது, ஒருவர் தம் மகளைத் தக்க ஏழை மணாளனுக்குத் தாமே எல்லாச் செலவும் ஏற்று மணஞ்செய்து வைப்பது, விலைக்கொடையாவது, ஒருவன் தன் மகளுக்கு ஈடாக ஒரு தொகையை ஒரு செல்வனிடம் பெற்றுக்கொண்டு, அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுப்பது; விலை விற்பனை; இது கீழோரிடம் அருகி நிகழ்வது; நிலைப்பாட்டுக் கொடையாவது, ஒருவர் தம் மகளை ஒருவனுக்கு ஏதேனும் நிலைப்பாடு அல்லது அக்குத்துப் (condition) பற்றி மனைவி யாகக் கொடுப்பது. அந் நிலைப்பாடு, இத்துணைப் பரிசந்தரல் வேண்டு மென்றும், இத்துணைக் காலம் பெண்ணின் பெற்றோர்க்கு உழைத்தல் வேண்டு மென்றும், இன்ன மறச்செயலைப் புரிதல் வேண்டுமென்றும், மணமகளை இன்ன கலையில் வெல்லுதல் வேண்டுமென்றும், மணத்தின் பின் பெண் வீட்டிலேயே வதிதல் வேண்டுமென்றும், பல்வேறு திறப்பட்டதாயிருக்கும். மறச்செயல்கள், கொல்லேறு கோடல் (ஏறு தழுவல்), திரிபன்றி யெய்தல், புலிப்பால் கறத்தல், கொடுவிலங்கு கோறல், பகைவரையழித் தல், வில்நாணேற்றல், பெருங்கல் தூக்கல் முதலியன. ஏறு - காளை, கோடல் - அடக்கல், கோறல் - கொல்லுதல். திரிபன்றி யெய்தலாவது, மிகவுயரத்தில் விரைவாகச் சுழன்று கொண்டிருக்கும் சிறிய பன்றி யுருவை ஒரே தடவையில் எய்து வீழ்த்துதல்.
|