| திங்கள் குலத்தாரென்றும், கதிரவன் குலத்தாரென்றும் கூறப்படுபவர்,         முறையே, பாண்டிய சோழ மரபினரே. மிகப்பெரிய நிலப்பரப்பினாலும், மிக நீண்டகாலக்         கடப்பினாலும், தென்னாட்டு வேந்தர் காவல் செய்ய முடியாமலும், வடக்கே போகப்போக         மொழிதிரிந்தும், வடநாவலத் திரவிடநாடுகள் பிரிந்துபோய், அங்குள்ள திரவிடமக்களும்         வெவ்வேறு குலத்தாராக மாறிவிட்டனர்.     முதலாவது விந்தியமலைக்கு வடக்கிலுள்ளவரும், பின்பு வேங்கட         மலைக்கு வடக்கிலுள்ளவரும், அதன்பின் குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு வடக்கிலும்         மேற்கிலுமுள்ளவரும் திரிந்து போயினர்.     மொழி திரியத்திரியக் குலமும் திரிந்தது. விந்தியமலைக்கு         வடக்கில் மொழி திரிந்த காலம் சுமார் கி.மு. 3500. வேங்கட மலைக்கு வடக்கில்         மொழி திரிந்த காலம் (தெலுங்கு) சுமார் கி.மு. 2500. தமிழ்நாட்டின் வடமேற்குப் பாகத்தில்         மொழிதிரிந்த காலம் (கன்னடம்) சுமார் கி.மு 1000. மேற்குப் பாகத்தில் மொழி திரிந்த         காலம் (மலையாளம்) கி.பி. 14ஆம் நூற்றாண்டு.     தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம்>திரமிடம்>எனத்         திரிக்கப்பட்டது. தெலுங்கு கொடுந்தமிழா யிருந்தவரை திரவிடம் என்பது தமிழையே குறித்தது.         தெலுங்கு தனி மொழியாய்த் திரிந்தபின், தெலுங்கும் தமிழும் ஆந்திர திரவிட மெனப்பட்டது.         பின்பு கன்னடம் மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்தபின், தமிழ் ஒன்றே தமிழ் என்றும்,         தமிழும் அதனின்று திரிந்த பிறமொழிகளும் பொதுவாய்த் திரவிடமென்றும் அழைக்கப்பட்டன.     தமிழர் தெற்கிருந்து வடக்கே சென்றதால், வடக்கே செல்லச் செல்லத்         தமிழ் திரிந்தது. திரிந்த தமிழ் கொடுந்தமிழ் என்றும் திரியாத தமிழ் செந்தமிழ்         என்றுங் கூறப்பட்டது. பண்டைக் கொடுந்தமிழ் களெல்லாம் திரிவுமிகுதியாலும் ஆரியர்         கலப்பாலும் பிறமொழிகளாய்ப் பிரிந்துவிட்டன. தமிழ்நாட்டிற்குள்ளேயே இன்று வடக்கில்         கொடுந் தமிழும் தெற்கில் சிறிது நல்ல தமிழும் வழங்குகின்றன.     ஆதியில் இந்தியா முழுதும் திரவிடரே பரவியிருந்தனர். பின்பு,         மேனாடுகளிலிருந்து ஆரியர் (கி.மு. 3000), உணர் (ஹு ணர்) முதலியோரும் கீழ்நாடுகளிலிருந்து         மங்கோலியர் நாகர் முதலியோரும் வந்து, வடஇந் தியாவிற் குடியேறி அங்கிருந்த திரவிடமக்களுடன்,         இரண்டறக் கலந்து போயினர். ஆயினும், தொன்றுதொட்டுப் பிறருடன் மணவுறவில்லாது         வாழும் பிராமணரையும், பெலுச்சித்தானத்திலும், பனிமலையடிவாரத்திலு முள்ள சில மலைவாணரையும்         வடஇந்தியாவிலும் பிரித்துக் கூறலாம்.     இடையிந்தியாவில், தெலுங்கர் கருநடர் (பன்னடியர்) முதலிய திரவிட         வகுப்பார், மொழியிலும் நாகரிகத்திலும் ஆரியத்தொடு கலந்து போனாலும், குலத்தில்         கலக்கவில்லை. ஆகையால், குலவகையில் இடையிந்தியத் திரவிடரை ஆரியரினின்றும்         பிரிக்கலாம். |