லக்கம் (ஒன்பது நூறாயிரம்) பொற்காசும் அரியணைக் கீடாக அமைச்சுரிமையும் பெற்றார். பெருங்குன்றூர்கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி, முப்பத்தீராயிரம் பொற்காசும் பல்வகைப் பரிசிலும் பெற்றார். மாதவிபோல் தன் ஆடல்பாடலை அரங்கேற்றிய நாடகக் கணிகைய ரெல்லாரும், ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெற்றனர். அரசரை யடுத்துப் பாடிய பாணரெல்லாரும் பொற்றாமரையும், பாடினியரெல்லாரும் பொன்னரிமாலையும் பரிசாகப் பெற்றனர். தில்லைச் சிற்றம்பலம் பொற்பலகையால் வேயப்பட்டிருந்தது. மதுரையம்பலம் வெள்ளியம்பலம் என்று பெயர் பெற்றிருந்த தனால், தில்லையம்பலம் அன்று பொன்னம்பலமா யிருந்திருத்தல் வேண்டும். மூவேந்தரும் கொடைமடம்பட்டுப் பிராமணப் பூசகர்க்குத் துலைநிறைப் பொன் தானஞ் செய்துவந்தனர். கடைக்கழகக் காலத்தில் இத்துணைப் பொன்வளம் இருந்ததெனின், தலைக் கழகத்தினும் முற்பட்டு மக்கள்தொகை மிகக் குறைவாயிருந்த காலத்தில், சிற்சில கருவிகளையேனுஞ் செய்துகொள்ளப் போதிய பொன்னிருந்ததென்பது நம்பத்தகாத தன்று. (3) தென்னாப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் இன்றும் பொன் கிடைக்கின்றமை. உலகில் இன்று மிகுதியாகப் பொன் கிடைக்கும் இடங்கள் இரசியா, தென்னாப்பிரிக்கா, கானடா, அமெரிக்க ஒன்றிய நாடுகள் (U.S.A.) என்னும் நான்காம். பொன் கிடைக்கும் வகைகள், தூள்(dust), மணல்(grain), தகணை(nugget), நரம்பு (lode ot vein), கலப்பு (mixture) என ஐந்து. 1850-ல் ஆத்திரேலியப் பொன் கண்டுபிடிக்கப்பட்டபின், பொற்பித்தர் பெருந்திரளாகப் போய் அங்குச் சரிந்தனர். பல விடத்திற் பெருந்தகணைகள் நிலமட்டத்திற்கு ஒருசில விரலங்கட்குக் (inches) கீழேயே கண்டெடுக்கப்பட்டன. 'அரம்ப மலை மணல்' தகணை ('Sierra Sands' nugget) 1117 விரனையும்(oz), 'ஆத்தம் பெருமாட்டி' (lady Hotham) 1,177 விரனையும், 'நல்வரவு அயலார் தகணை' (Welcome Stranger Nugget) 2000 விரனைக்கு மேலும் 'ஆலதர்மன் தகணை' (Holtermann nugget) 200 துலத்திற்கு (lb.) மேலும் எடை நின்றன. குமரிக்கண்டம் ஆத்திரேலியாவோடும் தென்னாப்பிரிக்கா வோடும் இணைந்திருந்ததனால், அந் நடுவிடத்திலும் பொற் றகணைகள் எளிதாய்க் கிடைத்திருத்தல் வேண்டும்.
|