பக்கம் எண் :

தமிழர் வரலாறு-151

இதுகாறுங் கூறியவற்றால்,வடசொல்லாகக் கருதப்படும் தாம்பரம், தாமரைஎன்னுஞ் சொற்களும் தென்சொல்லே யென்றும்,இங்ஙனமே நூற்றுக்கணக்கான தென்சொற்கள்வடமொழியில் இனம்மறைந்து வழங்குகின்றனவென்றும், தமிழ் உண்மையில் திரவிடத் தாயும்ஆரிய மூலமும் ஆகுமென்றும் அறிந்துகொள்க.

பொற்காலத்திற் பொன்னால்உண்கலம் குடிகலம் நீர்க்கலம் முதலிய பல்வகைக்கலங்கள் செய்யப்பட்டனவேனும், அவைபெருமக்களாலேயே பயன்படுத்தப்பட்டிருத்தல்வேண்டும். முதன்முதலாகப் பொதுமக்கள் புழங்கியமாழைக் கலங்கள், செம்பினாற்செய்யப்பட்டவையே. அதனால், சில குறிப்பிட்டவடிவையுடைய கலங்கள் எவ்வெக் கருவியாற்செய்யப்படினும், இன்றும் செம்பு, செப்பு,செப்புக்குடம் எனச் செம்புக்காலப்பெயர்களாலேயே வழங்கி வருகின்றன.

நிலையாக வைத்துப் போற்ற வேண்டியஆவணங்களும் முறிகளும், எங்கும் எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில், செப்பேடுகளிற்பொறிக்கப்பட்டுச் செப்புப் பட்டையம்எனப்பட்டன.

செம்பில் வார்க்கப்பட்டதெய்வப்படிமைகள் செம்புக் குட்டி யென்றும், செப்புத்திருமேனி யென்றும் சொல்லப்பட்டன.

"புளியிட்ட செம்பையும் போற்று கிலேனுயர் பொன்னெனவே" 

(பட்டினத்தார்,பொது.61)

முதன்முதல் மரத்திற் குடையப்பட்ட அல்லது செய்யப்பட்ட மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி, செம்பிலும் வார்க்கப்பட்டுச் செப்புக்கால் எனப் பெயர் பெற்றது.செப்புக்கால் திருச்சிற்றம்பல முடையான் என்பது,சோழர் காலத்தில் வழங்கிய நெல்லளக்குங் கருவிவகை.

உளி, கத்தி, அரம், வாள், கறண்டி,கலப்பைக் கொழு முதலிய பலவகைக் கருவிகளும்,பொற்காலத்திற்குப் பின் செம்பிலேயேசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

வலிய பகைவராலும் எளிதாய்த் தகர்க்கமுடியாவாறு, செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக்கருங்கல்லாற் கட்டிய இஞ்சி யென்னுங் கோட்டைமதில்வகை, எருமையூர்(மைசூர்) நாட்டுத் துவரைநகரிலிருந்தமை மேற்குறிக்கப்பட்டது. இராவணன்கோட்டை அத்தகைய மதிலுடைமையாற்செப்புக்கோட்டை யெனப்பட்டது.

"செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி" 

(கம்பரா.கும்ப.160)