இலையை இலக்கென்பது இன்றும்
தென்பாண்டி நாட்டு வழக்காகும். சிறுநுண்மைக்குப்
பெரும்பாலும் இலையையே குறியாகக் கொண்டமையால்,
இலக்கு என்னும் சொற்குக் குறி என்னும் பொருள்
தோன்றிற்று.
(6) இலக்கணம் (தோரா. கி.மு. 10,000)
இலக்கணமும், மொழியின் அல்லது
இலக்கியத்தின் சிறந்த அமைப்பையும் நடையையும்
எடுத்துக்கூறுவதையே குறிக்கோ ளாகக்
கொண்டமையின், அப் பெயர் பெற்றது. இலக்கு+அணம்=
இலக்கணம்.
"உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே" (தொல். 993)
என்னும் தொல்காப்பிய நூற்பாவில்,
குறி என்னுஞ் சொல் இலக்கணத்தைக் குறித்தல்
காண்க. இலக்கியம் இலக்கணம் என்னும்
இருசொல்லும் ஒரே முதனிலையே. பொருள்
வேறுபாடுபற்றி ஈறு வேறுபட்டன. இவையிரண்டும்
முதனிலையினாலும் ஈற்றினாலும் தூய தென்சொல்லே
யென்று தெளிக. இவை வடமொழியில் முறையே லஷ்ய
லக்ஷ்ண என்று திரியும். ஆயின், அங்கு இலக்கண
விலக்கியங்களைக் குறிப்பவை வ்யாகரண, ஸாஹித்ய
என்னுஞ் சொற்களே. லக்ஷ்ய லக்ஷண என்னும் சொற்கட்கு
மூலமாக வட மொழியில் காட்டப் பெறும் லக்ஷ் என்னும்
சொற்கு, இலக்கு(குறி) என்பதே பொருள். ஆகவே,
இவ்விரு வடசொல்லும் தென்சொல் லின்
திரிபென்பது தெரிதரு தேற்றமாம். மேலும்,
தமிழிலக்கண முதனூல் ஆரிய வருகைக்கு 8000 ஆண்டு
முற்பட்ட தென்னும் உண்மையும், இதை வலியுறுத்துவது
காண்க.
இலக்கணத்திற்கு அணங்கம் என்றொரு
பெயர் குறிக்கின்றது சிந்தாமணி நிகண்டு(103).
கதிரைவேற்பிள்ளை அவர்கள் தொகுத்த
தமிழ்மொழி யகராதியில், "அஞ்சணங்கம்-பஞ்ச
விலக்கணம். அஞ்சணங்கியம்-பஞ்சவிலக்கியம்"
எனக் குறிக்கப்பட்டுள்ளது. அணங்கம் அணங்கியம்
என்னும் இருசொற்கும், அணங்கு என்பது முதனிலையா
யிருத்தல் வேண்டும். அணங்குதல்-ஒலித்தல்.
"மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்தி" (பொதுவியற்படலம், 8)
என்பது புறப்பொருள் வெண்பாமாலை .
அணங்கு என்பது எழுத்தையுங் குறிக்குமாயின்,
அணங்கம் அணங்கியம் என்னும்
|