சொற்கள், முறையே,
இலக்கணத்தையும் இலக்கியத்தையுங் குறிப்பது
பொருத்தமே. ஆயின், இச் சொற்கள் தமிழகத்தில்
என்றும் வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை.
இலக்கியம் இலக்கணம் என்பனவே தொன்றுதொட்டு
வழங்கி வருவன.
எழுத்து-எழுத்தொலியம் (Phonemics)
தமிழெழுத்துகள், (1) முதல், (2) சார்பு என
இருவகைப்படும். முதலாவது இயல்பாகத் தோன்றிய
எழுத்துகள் முதலெழுத்துகள்; பின்பு அவற்றுட்
சிலவற்றின் சார்பாகத் திரிந்த எழுத்துகள்
சார்பெழுத்துகள். உயிரெழுத்துப் பன்னிரண்டும்
மெய்யெழுத்துப் பதினெட்டுமாக, முதலெழுத்துகள்
முப்பதாம். சார்பெழுத்துகள் மூன்றாம். ஆகவே,
தமிழெழுத்துகள் அல்லது ஒலிகள் மொத்தம் முப்பத்து
மூன்றாம்.
உயிரெழுத்துகள், குறிலைந்தும்
நெடிலேழுமாக இருவகைப் படும். மெய்யெழுத்துகளும்,
வல்லினம் ஆறும் மெல்லினம் ஆறும் இடையினம்
ஆறுமாக மூவகைப்படும்.
(1) முதலெழுத்துகள் (Phonemes)
மாந்தன் தன் வாயைத் திறந்தவுடன்
இயல்பாக ஒலிக்கும் ஒலி அகரம் அல்லது ஆகாரம்.
குழந்தை பிறந்தவுடன் அழும் ஒலியும் முழைத்தல்
முறைப்பட்ட அகர ஆகாரமே. ஆகவே, முதலாவது மாந்தன்
வாயில் தோன்றிய உயிரொலியே; அது அகரமே.
வாய் திறவாத நிலையில்,
மூக்குவளியால் ஒலிக்கும் ஒலி மகரம். ஆகவே,
மெய்யொலிகளுள் முதலாவது தோன்றியது, இதழ்
மட்டும் பொருத்தி எளிதாக வொலிக்கும்
மகரமாகும்.
இங்ஙனம் முதன்முதலாகத் தோன்றிய
அகரமும் மகரமுஞ் சேரின், அம் என்னும் அசை
பிறக்கும். ஒருகால் இதினின்று, அம்ம என்னும்
முறைப்பெயர் குழவிவளர்ப்பொலியாய்த் தோன்றி
யிருக்கலாம். பாலுறுப்பைக் குறிக்கும் அம்மம்
என்னும் சொல் மருமம் என்பதன் திரிபாகும்.
மருமம்-மம்மம்-அம்மம்.
மாந்தன் வாயில் தோன்றிய
மொழியொலிகளுள், உயிரெல் லாம் முன்பும்
மெய்யெல்லாம் பின்புமாகத் தோன்றவில்லை,
உயிரும் மெய்யும் ஒழுங்கின்றி மாறிமாறியே
தோன்றின. அம் முறையை இன்று காண்பது அரிது.
ஆயினும், உயிரினத்தையும் மெய்யினத்தையும் வேறு
பிரித்து ஒவ்வோரி னத்தையுஞ் சேர்ந்த ஒலிகள்
தோன்றிய முறையை ஒருவாறு அறியலாம்.
|