பக்கம் எண் :

இயனிலைப் படலம்115

மண்+யானை = மண்ணியானை

வேள்+யாவன் = வேளியாவன்

இவ்வகைப் புணர்ச்சி எல்லார்க்கும் உடன்பாடன்று.

குற்றியலுகரம்

தனிநெடிற்கும் இரு அல்லது பலவெழுத்திற்கும் பின், வல்லின மெய்யோடு கூடிச் சொல்லீறாய் வரும் உகரம், இதழ் குவியாது, இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டு, அரை மாத்திரையாய்க் குறுகியொலிக்கும் அது குற்றியலுகரம்.

எ-டு: மாடு, செக்கு, பருப்பு, பிண்ணாக்கு, வந்ததற்கு.

ஆய்தம்

தனிச்சொல்லிலும் புணர்ச்சொல்லிலும், குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் இடையில், நுண்ணிய ககரமாக ஒலித்து நிற்கும் எழுத்து ஆய்தமாம். ஆய்தல்-நுணுகுதல்.

"ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்தல்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" (தொல். 813)

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

ஆய்தம் பின்வருமாறு நால்வகையில் தோன்றும்.

(i) புணர்ச்சித் திரிபு

சொல்லுறுப்புப் புணர்ச்சி:

எ-டு :
அல்+கு = அல்கு-அஃகு
வெள்+கு = வெஃகு

அல்குதல் = சுருங்குதல். வெள்குதல் = விரும்புதல். வெள்-வெண்டு(ஆசைப்படு). வெள்-வெய்-வெய்யோன் = விரும்பியோன்.

சொற்புணர்ச்சி:

எ-டு :
பல்+துளி = பஃறுளி
கல்+தீது = கற்றீது, கஃறீது
முள்+தீது = முட்டீது, முஃடீது
அவ்+கடிய = அஃகடிய

(ii) தனிச்சொல் திரிப்பு

எ-டு :
அத்து-அஃது, பத்து-பஃது
பகுதி-பஃதி