பக்கம் எண் :

116தமிழ் வரலாறு

(iii) சாரியைப் புணர்ப்பு

எ-டு : அஃகான், மஃகான்

(iv) இடைச்செருகல் ("ஒற்றில்வழி யொற்று")

எ-டு : இலகு-இலஃகு, விலகு-விலஃகு

இவ்வகை செய்யுட்கே யுரியதாம்.

ஆய்தம் ஓருயிரோடுங் கூடாது தனித்து நிற்பதால் தனிநிலை என்றும், புள்ளிவடிவாயிருப்பதால் புள்ளி என்றும், முப்புள்ளி என்றும், தனக்குப்பின் வரும் வல்லின மெய்யை மெலிவிப்பதால் நலிபு என்றும் பெயர்பெறும்.

பத்து, பஃது; கற்றீது, கஃறீது என்னும் சொல்லிணைகளை ஒலித்துக் காண்க.

இயன்மொழியாகிய தமிழுக்குரிய ஆய்தம், திரிமொழிகட் குரிய பொலிவொலிகளைப் (Voiced Sounds) பிறப்பிக்கும் என்னும் கூற்று, திரிபுணர்ச்சியின் விளைவென அறிக. ஆய்தவொலியின் ககரவினத் தன்மையை அஃகேனம், மஃகான் என்னும் சாரியைப் புணர்ப்பாலும் கண்டுகொள்க.

சார்பெழுத்து மூன்றனுள் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் தாம் நிற்குமிடத்து வேறொன்றற்கும் இடந்தராமையால், அவ் விரண்டையும் மறுவொலியன்கள் (Allophones) என்னலாம். ஆய்தம் அத்துணை ஒழுங்கும் யாப்புறவும் பெறாமையின் மறுவொலிய னாகாது.

எண்

உண்மையில், தமிழெழுத்துகள் முதலெனப்படும் முப்பதே. அதனாலேயே,

"எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர விறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையேக (தொல். 1)

எனத் தொல்காப்பியர், நூன்மரபு என்னும் முதல் இயலில், முந்து நூலார் மொழிந்தவாறு முதலெழுத்திற்கே சிறப்புக் கொடுத்துக் கூறினார்.

"மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்கினிதாய்த்
தோன்றிடும்அத் தமிழ்" (காஞ்சி. தழுவ. 244)

என்று சிவஞான முனிவர் கூறியதுங் காண்க.