யுடையது) என்ற வடசொல் தமிழில்
வழக்கூன்றியபின், அதற்கு நேரான உயிர்மெய்
என்னும் தமிழ்ச்சொல் வழக்கற்றுப்போனது டன்,
தன் பொருளையும் இழந்தது. தமிழில் முதனூல் கண்ட
முனைவன், மூவகை யெழுத்துகளும் ஒலியியக்கத்தில்
மூவகைப் பொருள்களை ஒத்திருப்பது கண்டு, அப்
பொருள்களின் பெயர் களையே அவ் வெழுத்துகட்கும்
உவமையாகு பெயராக இட்டான். தானே ஒலிக்கும் எழுத்து
உயிரெழுத்து; உயிரொடு கூடியல்லது ஒலிக்காத எழுத்து
மெய்யெழுத்து; உயிர்மெய்யைப் போன்ற எழுத்து
உயிர்மெய்யெழுத்து. இத்தகைய அமைப்பு வேறெம்
மொழியிலும் காண்பதற்கரிதாம்.
குறில், நெடில், வல்லினம், மெல்லினம்,
இடையினம் என்பன வெளிப்படை.
உயிர், ஆவி என்பனவும்; மெய், உடல்,
உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி என்பனவும் ஒருபொருட்
சொற்கள்.
முறையும் பிறப்பும்
தமிழ் எழுத்திலக்கணம் பன்னிரண்டுள்,
முறையும் ஒன்றாம். இது மேலை மொழிகட்கில்லை.
வடமொழியுட்பட ஏனை யிந்திய மொழிகளெல்லாம்
நெடுங்கணக்கு முறையில் தமிழைப் பின்பற்றி யனவே.
உயிர், முந்தித்
தோன்றியதுபற்றியும், தானாய் ஒலிப்பது
பற்றியும், நெடுங்கணக்கில் முன் வைக்கப்பெற்றது.
குறுமை பற்றிக் குறில் முன்னும், நெடுமைபற்றி நெடில்
பின்னும் வைக்கப்பட்டன.
ஆ, ஈ, ஊ மூன்றும், முறையே சேய்மைச்
சுட்டாகவும் அண்மைச் சுட்டாகவும் முன்மைச்
சுட்டாகவும் இயல்பாகத் தோன்றினமையால், பிற
வுயிர்களுக்கு முன் வைக்கப்பட்டன. அவற்றுள்,
ஆகாரம் வாய் திறந்த மட்டில் ஒலிப்பதால்
முதலிலும், ஈகாரம் வாயின் பின்பக்கத்தில் அடிநா
விளிம்பு மேல்வாய்ப் பல்லைப்
பொருந்தியொலிப்பதால் இடையிலும், ஊகாரம்
வாயின் முன் பக்கத்தில் இதழ்(உதடு)
குவிந்தொலிப்பதால் கடையிலும் வைக்கப்பட்டன.
இதினின்று, வாயின் பின்புறத்திலிருந்து முன்புறம்
நோக்கிய வரிசையில் தமிழ் எழுத்துகள்
அமைக்கப்பட்டதை அறியலாம்.
ஏகார ஓகாரங்கள் முறையே ஈகார
ஊகாரங்களின் மோனைத் திரிபாதலால், இயல்பாகத்
தோன்றி முதல் மூன்றுயிர்கட்கும் பின்
வைக்கப்பட்டன. அவற்றுள், ஏகாரம் அடிநாவிளிம்பு
மேல்வாய்ப் பல்லைப் பொருந்தியொலிப்பதால்
முன்னும், ஓகாரம் இதழ் குவிந்தொலிப்பதால்
பின்னும், வைக்கப்பட்டன.
|