பக்கம் எண் :

124தமிழ் வரலாறு

இசை குறைந்தவிடத்து அதை நிறைக்கச் செய்யுளிலும் அளபெடை நிகழும்.

உலகவழக் களபெடையும் செய்யுள்வழக் களபெடையும் பின்வருமாறு பெயர் பெறும்:

உலக வழக்கு செய்யுள் வழக்கு
இயற்கை யளபெடை
உலகிய லளபெடை
செயற்கை யளபெடை
செய்யுளிய லளபெடை

செய்யளிற் குறில் அளபெடுப்பினும், நெடில்வடிவின் பின்னரே குறில் வடிவு குறிக்கப்படும். வல்லினத்துடன் ளகர ழகரமும் செய்யுளில் அளபெடுக்கா.

குற்றியலுகர மேறிய ககரம் ககரத்தோடு புணரின், அக் குற்றிய லுகரம் கால்மாத்திரையாய்க் குறுகும்.

எ-டு: கொக்குக்கால்.

நொடித்தல் வினையில் நொடிக்கக் கருதுதல் கால்மாத் திரைக்கும், விரல்பொருத்துதல் அரை மாத்திரைக்கும், விரல் திரித்தல் முக்கால் மாத்திரைக்கும், வெடித்தல் ஒரு மாத்திரைக் கும், அளவு நிகழ்ச்சியாம்.

"உன்னல் காலே ஊன்றல் அரையே
முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே."

பலுக்கொலியம் (Phonetics)

உயிரெழுத்துகளுள், மூக்கொலியுயிர் அல்லது மெல்லின வுயிர் (Nasal vowel) என ஒன்று தமிழில் இல்லவே யில்லை. அவன், வந்தேன், மரம், போனோம் முதலிய சொற்களின் ஈற்றிலுள்ள மெல்லின மெய்களே, சோம்பலாற் செவ்வையாய்ப் பலுக்கப் பெறாமல் மூக்கொலியளவாய் ஒலிக்கின்றன. இவ் வொலியை ஈற்றயலுயிர் மேலேற்றி, அதனை மூக்கொலியுயிர் என்பது திரிபுணர்ச்சியே. அவர், தாய், மகள், வந்தால் முதலிய சொற்களின் இறுதியிலுள்ள இடையின மெய், ஓரிடத்தும் மூக்கொலியாய் ஒலியாமையை ஒலித்துக் காண்க.

மொழிமுதல் உகரம் இதழ்குவித்தே ஒலிக்கப்பெறுவதால், குற்றியலுகரம் சொன்முதற்கண் வரவே வராது. திரவிடப்புலவர் சிலர் கருதுகிறபடி குற்றியலுகரம் மெய்யீறுமன்று. ஒலிக்குறுக்கத்தை அல்லது திரிபைக் காட்டுதற்கே, அதன்மீது புள்ளி யிடப்பெற்றது.