பக்கம் எண் :

இயனிலைப் படலம்131

(3) சொல்வகை விழுத்தம்

இது சொல்வகைக்கேற்பச் சொன் முதலிலாவது இறுதி யிலாவது நிகழும்.

எ-டு: கட்டு - ஏவலொருமை வினை
கட்டு - முதனிலைத் தொழிற்பெயர், முதனிலைத் தொழிலாகு பெயர்.
தபு = (நீ)சா - தன்வினை
தபு = சாவி (கொல்)- பிறவினை

சிலர் விழுத்தத்தைக் குற்றியலுகர வொலியொடு மயக்கி, கட்டு என்னும் ஏவல் வினையீறு முற்றியலுகரமென்றும், கட்டு என்னும் முதனிலைத் தொழிற்பெயரீறு குற்றியலுகரமென்றும், உரைப்பர். விழுத்தம் வேறு; முற்றியலுகரம் வேறு. குற்றியலுகரம் ஒருபோதும் இதழ்குவிந்து முற்றியலுகரமாகாது.

அழுத்தம் (Stress or Emphasis)

பொருளை வலியுறுத்தற் பொருட்டு, ஒரு சொல்லை யேனும் சொல்லுறுப்பையேனும் அழுத்தியொலிப்பது அழுத்தமாம்.

எ-டு: மறைமலையடிகள் தமிழில் மாபெரு மலை - பெயர்ச்சொல்

மறைமலை ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லுநர்- (குறிப்பு) வினைச்சொல்

மறைமலையடிகள் இந்தியும் கற்றார்கள் - இடைச்சொல்.

ii சொல்

மூவகைச்சொல்

முதற்காலத்தில் இலக்கணவகைச்சொல் பெயர், வினை, இடை என மூன்றாகவே யிருந்தன. இதுவே எல்லா மொழிகட்கும் பொதுவான அறிவியன்முறைப் பாகுபாடாம்.

இலக்கணவகைச்சொல் மூன்றும் இயல்பாகத் தோன்றிய முறை, பொதுவாக நோக்கின், இடை, வினை, பெயர் என்பதாகும்.

உணர்ச்சியொலிகளும் விளியொலிகளும் குறிப்பொலிகளும், மாந்தன் வாயில் முந்தித் தோன்றியவை யாகும். இவை இடைச்சொல் என்பது தெளிவு. சப்பு, துப்பு, விக்கு, முக்கு, விம்மு, தும்மு, இசி, சிரி முதலிய முந்தியற் சொற்கள், வினையாகத் தோன்றிப் பின்பு பெயருமாயின.