ஒன் என்னுஞ் சொல்லே அன் என்று
திரிந்து யான் (நான்), நீன், தான், என்னும்
பெயர்களில் னகர மெய்யளவாக நின்று
ஒருமையுணர்த்துகின்றது. அன்னீறு உயிரொடு புணரின்
முதல் கெடும்.
ஏ+அன் = ஏன், ஊ-அன் = ஊன், ஆ+அன் = ஆன்
ஒ-நோ: மக+அன் = மகன். கோ+அன் = கோன்
(கோவன்)
உம்முதல்-கூடுதல். உம் என்னும் வினை
இன்று வழக்கற்று, அதன் அள்ளைத் திரிபான அம்
என்னும் சொல்லும், அதன் வழியடியான கும் என்னுஞ்
சொல்லுமே வழக்கிலுள்ளன.
அம்-அமல்-அமலை = திரளை. அமல்-அமர்.
அமர்தல் = பொருந்துதல். அம்-அமை. அமைதல் =
நெருங்குதல், கூடுதல்.
அம்-அம்பு-அம்பல்=குவிதல், குவியும்
முகிழ். அம்பல்-அம்பலம் = அவை, கூட்டம், மன்றம்.
ம.அம்பலம், க. அம்பல, து. அம்பில.
அம்பலம்-வ. அம்பர. சிற்றம்பலம்-வ.
சிதம்பர (Cidambara).
உம்-கும். கும்முதல் = கூடுதல்.
கும்-கும்மல். கும்-கும்பு-கும்பல்.
உம் என்னும் சொல் கூடுதலைக்
குறித்ததனாலேயே, அது எண்ணுப்பொருள் அல்லது
கூட்டுப்பொருளிடைச் சொல் லாகச்
கொள்ளப்பட்டது.
எ-டு: எழுத்தும் சொல்லும் பொருளும்.
நானும் வருவேன் = நான்கூட வருவேன், இதை
ஒரு சிறு பிள்ளையும் செய்துவிடும் = இதை ஒரு
சிறுபிள்ளைகூடச் செய்து விடும்.
இவ் வழக்குகளில், உம்மைச் சொல்லும்
கூடற்சொல்லும் முற்றும் பொருளொத்திருத்தல்
காண்க.
இவ் வும்மைச் சொல்லே யாம், நீம்,
தாம் என்னும் பெயர்களில் மகரமெய்யளவாக நின்று
பன்மையுணர்த்துகின்றது. கால்டுவெலார் கருத்தும்
இதுவே. அம்மீறு போன்றே உம்மீறும், உயிரொடு
புணரின் முதல் கெடும்.
ஏ+அம் = ஏம், ஊ+அம் = ஊம், ஆ+அம் = ஆம்
ஒ-நோ: மண+அம் = மணம், கா+அம் = காம்
(ஆசை)
ஐம்பாலீறுகளின் வரலாற்றைப்
பின்னர்க் காண்க.
|