பக்கம் எண் :

இயனிலைப் படலம்137

மூவகைச் சுட்டுப்பெயர் முறையிலேயே எ, ஏ, யா, என்னும் வினா வடிகளினின்று ஐம்பால் வினாப்பெயர்கள் தோன்றியுள்ளன.

2. வினாப்பெயர்கள் (Interrogative Pronouns)

எ: எவன், எவள், எவர் (எவர்கள்), எது, எவை

ஏ: ஏவன், ஏவள், ஏவர் (ஏவர்கள்), ஏது, ஏவை

யா: யாவன், யாவள், யாவர் (யாவர்கள்), யாது, யாவை

ஏ-எ., ஏ-யா, எ-எவ்,. எ-எல்-எது-எத்து-. எந்து. ஏ-ஏல்-ஏது.

உயர்திணை ஆண்பாலைக் குறிக்கும் எவன் என்னும் வினாப் பெயரும், அஃறிணை யிருபாலையும் உணர்த்தும் எவன் என்னும் வினாப்பெயரும், வெவ்வேறாம்.

ஏது என்னும் சொல், ‘எப்படிக் கிடைத்தது?‘ என்னும் பொருளில் குறிப்பு வினைமுற்றாகவும் வரும்.

எ-டு: உனக்கு இது ஏது?

எது என்னும் சொல் சிறிது அறியப்பட்ட பொருள் பற்றியும், யாது என்னும் சொல் சிறிதும் அறியப்படாத பொருள்பற்றியும், வினாவாக வரும்.

எ-டு: குதிரைவாலி யாது?-சிறிதும் அறியப்படாதது. வரகு இக்கூலங்களுள் எது?-சிறிது அறியப்பட்டது.

யாவர் என்னுஞ் சொல் யார் எனத் தொக்கு உயர்திணை முப்பாலையுங் குறிப்பதுடன், உலக வழக்கில் ஆர் என்றும் மருவும்.

யா என்னும் வினாவடி, செய்யுள் வழக்கிற் பலவின்பால் வினாப் பெயராகவும் வழங்கும்.

எல்-என்-என்னது (ஒருமை), என்ன (பன்மை).

ஏல்-ஏன்.

"ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ" (தொல். 32)

என்று தொல்காப்பியம் கூறுவதால், வினாவெழுத்து முதற் காலத் தில் நெடிலாகவே யிருந்ததென்பதும், அது ஏகாரமே யென்பதும், உய்த்துணரப்படும்.

ஏ-யா-ஆ-ஓ

யா சொல்லின் முதலிலும், ஆ ஓ சொல்லின் ஈற்றிலும், ஏ அவ்வீரிடத்தும், வினாவாக வரும்.