ஒரு பொருளைப்பற்றி எது என்று வினவுவது,
ஓரிடத் திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை
எடுத்துக்காட்டச் சொல்வது போலிருத்தலால்,
எழுச்சியை அல்லது உயர்ச்சியை உணர்த்தும் ஏகாரம்
வினாவெழுத்தாகக் கொள்ளப்பட்டது என்று கருத
இடமுண்டு.
3. படர்க்கைப்பெயர்ப் பாகுபாடுகள்
தன்மையும் முன்னிலையுமன்றிப் படர்வது
படர்க்கை. படர்தல் = பரந்து செல்லுதல்.
(1) அறுபொருட்பெயர்
எல்லாப் பொருள்களும் பொருள், இடம்,
காலம், சினை, குணம், தொழில் என அறுவகைப்படும்.
ஆதலால் அவற்றின் பெயரும் அறுவகையாம்.
பொருள் என்றது. காட்சிப்பொருளாகவோ
கருத்துப் பொருளாகவோ உள்ள ஒரு தனிப்பொருளை.
ஏதேனும் ஒரு பொருளிருப்பின், அது இருக்க
இடமும் காலமும் வேண்டும். பொருள்கள்
இயற்கையாயினும் செயற்கையா யினும், பெரும்பாலும்
பல வுறுப்புகளையுடையன. ஒவ்வொரு பொருட்கும் சில
தன்மைகளுண்டு. அத் தன்மைகளே உறுப்பையும் உடலையும்
துணைக்கொண்டு தொழிலாக வெளிப்படும். இங்ஙனம்
ஆய்ந்து பொருள்களை ஆறாக வகுத்ததும் அவற்றை
முறைப் படுத்தியதும், "வினையின் நீங்கி
விளங்கிய அறிவன்" முனைவனான முதனூலாசிரியனின்,
மெய்ப்பொரு ளறிவையும் தருக்கத் திறனையும்
தெள்ளிதிற் காட்டும்.
குறியீட்டைப் பொறுத்தமட்டில், குணம்
எனினும் பண்பு எனினும் ஒக்கும்.
முத்திணைப்பெயர்
உயர்திணை, அஃறிணை, அவ் விரண்டிற்கும்
பொதுவான விரவுத்திணை எனத் திணை மூவகைப்படும்.
எ-டு: உயர்திணைப்பெயர்-அவன்,
மாந்தன், முருகன்
அஃறிணைப்பெயர் -அது,
மரம், கல்
விரவுத்திணைப்பெயர்-தாய்,
பிள்ளை, ஆண், பெண்
திண்-திணை = திரட்சி,
தொகுதி, வகுப்பு.
|