பக்கம் எண் :

16தமிழ் வரலாறு

இனி, தா என்னும் வினைச்சொல் படர்க்கையிடத்தில் வரா தென்று விலக்கப்பட்டிருப்பதும், அது தமிழ்ச்சொல்லே யென்பதை உணர்த்தும்.

"தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை
முன்னிலை ஆயீ ரிடத்த." (தொல். 512)

(3) முத்து

இச் சொல் உருண்டையானது என்னும் பொருளது. இதனொடு தொடர்புடைய சொற்கள் முத்தை, முண்டு, முண்டை, முட்டு, முட்டை, முட்டி, முட்டான் முதலியன.

முண்டு = உருண்ட கட்டை. முண்டை - முட்டை.

"முண்டை விளைபழம்" (பதிற். 60:6)

முண்டம் = உருண்ட கட்டை, கை கால் தலையில்லா உடம்பு.

முத்தை = சோற்றுருண்டை (மொத்தை).

முட்டு = நடத்திற்குரிய உருண்ட பறை.

முட்டி = கொம்மட்டி.

முட்டான் = திருநீற்றிற்குரிய சாணவுருண்டை, மஞ்சட் கிழங்கு.

மிதுக்கம் பழத்தைக் குறுமுத்தம்பழம் என்பது கரூர் வழக்கு. உருண்டு சிறுத்திருக்கும் விதைகளையெல்லாம் முத்தென்பது பொதுவான உலக வழக்கு.

உலகில் முத்து விளையும் பலவிடங்களுட் சிறந்தது பாண்டி நாட்டு (மன்னார்குடா)க் கடல்.

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து"
(ஒளவையார்)

என்பது பழஞ்செய்யுள்.

முத்து பெரிதாயிருப்பின் முத்தம் எனப்படும். அம் என்பது ஒரு பெருமைப்பொருள் ஈறு (Augmentative suffix).

ஒ.நோ: மதி = நிலா. மதியம் = முழுநிலா

நிலை = தேர்நிலைபோற் சிறிய இடம். நிலையம்= புகை வண்டி நிலையம்போற் பெரிய இடம்