"அவற்றுள்,
"செய்கென் கிளவி வினையொடு
முடியினும்
அவ்வியல் திரியா தென்மனார்
புலவர்" (689)
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.
இனி, உகரச்சுட்டடிப் பிறந்து காலத்தை
யுணர்த்தும் உது என்னும் ஈறுபெற்றும்,
வினைமுதனிலைகள் தன்மையொருமை யெதிர்கால
வினைமுற்றாம். அதனொடு உம்மீறு சேரின் பன்மை
யாம். உகரம் முன்மைச்சுட்டாதலால், ‘உது‘ எதிர்
காலத்தை உணர்த்தும்.
எ-டு: கூறுது = கூறுவேன்; கூறுதும்=கூறுவோம்.
அது என்னும் ஈறுபோன்றே உது என்னும்
ஈறும், துவ்வென முதற்குறையாய் நின்று அல்லது
தொக்கு, புணர்ச்சியில் று, டு எனத் திரியும்.
எ-டு: செல்-செல்+து
= சேறு (செல்வேன்)
சேறு+உம் = சேறும்
(செல்வோம்)
கொள்-கோள்+து = கோடு
(கொள்வேன்)
கோடு+உம் = கோடும்
(கொள்வோம்)
லகர ளகரம் சேறல், கோடல் என்னும்
தொழிற்பெயரிற் போன்றே, ஈண்டும் திரிந்தனவென
அறிக.
செய்தி என்னும் முன்னிலை யொருமை
எதிர்கால வினை முற்று, உது என்னும் இடைநிலை
பெற்றதாகும்.
செய்+உது+ஈ = செய்யுதீ-செய்யுதி-செய்தி
= செய்வாய்.
"வழிபடு வோரை வல்லறி தீயே"
(புறம்.10)
செய்+உது+இர் = செய்யுதிர்-செய்திர் =
செய்வீர்.
‘இ‘ ஒருமையீறு; ‘இர்‘
பன்மையீறு. நீ-ஈ-இ. நீயிர்-நீர்-ஈர்-இர்.
செய்தி, செய்திர் என்னும் எதிர்கால
முற்றுகள், பின்பு ஏவலாகவும் ஆளப்பட்டன.
செய்தி என்பதில் ‘த்‘ எழுத்துப்பேறு
என்பது மொழி யாராய்ச்சி யில்லார் கூற்றாம்.
அம்மை, அக்காலம் என்னும்
சேய்மைச்சுட்டுகள் பண்டைக் காலத்தையும், உம்மை
என்னும் முன்மைச்சுட்டு எதிர்காலத்தையும்,
உணர்த்துவதால், அது என்பது இறந்தகால ஈறாகவும், உது
என்பது எதிர்கால ஈறாகவும் பயன்படுத்தப் பட்டன.
செய்+அது=செய்யது-செய்து (இ.கா. முற்றும்
எச்சமும்)
செய்+உது=செய்யுது (எ.கா. முற்று)
|