பக்கம் எண் :

இயனிலைப் படலம்183

"இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும் (தொல். வினை.46)

என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் அதற்கு, இது செயல் வேண்டுமென்பதுபட வருஞ்சொல் தன்பாலானும் பிறன்பாலானும் என ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையை யுடைத்தாம் என்றவாறு.

"தானென்றது செயலது வினைமுதலை."

"ஓதல் வேண்டும்" என்றவழி, வேண்டுமென்பது ஓதற்கு வினை முதலாயினாற்கும் அவனோதலை விரும்பும் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டுகொள்க" என்று சேனாவரையர் உரைத்த உரையையும் நோக்குக.

ஆகவே, நீங்கள் தமிழிற் பெயர் தாங்கல் வேண்டும் என்பது நீங்கள் தமிழிற் பெயர் தாங்குவதை நான் விரும்புகின்றேன் என்றும் பொருள்படுவது காண்க. இதனால் வேண்டற் சொல்லின் அடிப்படைப் பொருள் வெளிப்படுவதையும் நோக்குக.

சொற்கள் தம் இயற்பொரு ளடிப்படையில் பல்வேறு புதுப் பொருள்களைப் பெறுகின்றன. பெயர்களுள் ஆகுபெய ரிருப்பது போன்றே, வினைகளுள்ளும் ஆகுவினைகள் உளவென அறிக.

வேண்டும் என்பதன் எதிர்மறை வேண்டாம் என்பது. இது செய்யாம் என்னும் வாய்பாட்டுத் தன்மைப்பன்மை எதிர்கால எதிர்மறை வினைமுற்று. வேண்டாம் = வேண்டோம். காணேன் என்னும் ஒருமைப்பொருளில் காணோம் என்னும் பன்மைச் சொல் வழங்கிவருவது போன்றே, வேண்டேன் என்னும் ஒருமைப் பொருளிலும் வேண்டாம் என்னும் பன்மைச்சொல் வழங்கி வருகின்றதென அறிக. "வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே" என்னும் தனிப்பாடலடியை நோக்குக.

வேண்டா என்பது, வேண்டாம் என்பதன் ஈறுகெட்ட வடிவும் வேண்டாத என்னும் எதிர்மறை வினையாலணையும் பெயரின், ஈறுகெட்ட வடிவும், ஆக இருவகையில் நிற்கும்.