மலையாள நாடுகள் வெவ்வேறு பிரிந்து
போனமையாலும், தமிழ் ஒன்றே ஆரியத்தை
எதிர்த்துத் தன் தூய்மையைப் போற்றிக்
கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளமையாலும்,
வடசொற்கள் சேரச் சேரத் தெலுங்கு கன்னட
மலையாளத்திற்கும், தீரத்தீரத் தமிழுக்கும்
உயர்வு ஏற்படுவதனாலும், இந்தியும் வடமொழியும்
பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் அவர்தம்
இனமொழியாளர்க்கும் நேர்மாறான
கருத்துண்மையாலும், தெலுங்கு கன்னடம் முதலிய
இனமொழிகளெல்லாம் மீளத் தமிழொடு சேர முடியா
வளவு ஆரியவண்ணமாய் மாறிவிட்டமையாலும், அதனால்
இனமொழி களையும் புறக்கணிக்கும் நிலை தமிழுக்கு
ஏற்பட்டுவிட்டதனாலும், தமிழைத் தமிழ் என்றும்,
அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும்,
பிரித்துக் கூறல் வேண்டும். அவ்விரு கூறுகளையும்
இணைத்துக் குறிப்பதற்குத் தென்மொழி என்னும்
சொல்லை ஆளவேண்டும். இவற்றிற்கு ஆங்கிலத்தில்
முறையே, Tamil. Dravidian,
Tamilic or South Indian என்னும் சொற்களை
ஆளலாம்.
தமிழ் என்னும் சொல் திரவிடம் என்று
திரிந்தது போன்றே, தமிழம் என்னும் மொழியும் பல
திரவிட மொழிகளாகத் திரிந் திருப்பதனால்,
திரவிடம் என்னும் சொல்லால் திரவிட மொழி
களைக் குறிப்பது தக்கதே. வடமொழி என்னும் பெயர்
பல வட நாட்டு மொழிகளையும் ஆரியத்துள்
அடக்குவதுபோல், தென் மொழி என்னும் பெயரும் பல
தென்னாட்டு மொழிகளையும் தமிழுள் அடக்கும்.
தியூத்தானியம்(Teutonic)
என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த செருமானியம்,
தச்சம்(Dutch),
ஆங்கிலம் முதலிய மொழிகள் எங்ஙனம் திரும்ப
ஒன்று சேராவோ, அங்ஙனமே தென் மொழியம் என்னும்
வகுப்பைச் சேர்ந்த தமிழும் திரவிடமும்
ஒன்றுசேரா. பால் திரைந்து தயிரானபின் மீளப்
பாலாகாதது போல், தமிழ் திரிந்து திரவிடமான
பின் மீளத் தமிழாகாது. இங்கு மொழிகட்குச்
சொன்னது நாடுகட்கும் ஒக்கும்.
திரவிடம் என்னுஞ் சொல் முதலாவது
தமிழையே குறித்த தென்றும், நாலாயிரத் தெய்வப்
பனுவல் திரவிட வேதமென்றும் மெய்கண்டான்
நூலுக்குச் சிவஞான முனிவர் வரைந்த அகலவுரை
திராவிட மாபாடியம் என்றும் பெயர் பெற்றுள்ளன
வென்றும், தனித்தமிழாராய்ச்சி யில்லாத பண்டை
நிலைமையைக் கூறி, தமிழ்நாட்டையும் பிரிந்துபோன
திரவிட நாடுகளையும் ஒன்றாய் இணைக்க முயல்பவர்,
கறந்த பாலைக் காம்பிற் கேற்றுபவரேயாவர்.
ஆயின் அரசியற் கொள்கை யொப்புமைபற்றி,
தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒரு கூட்டாட்சி
அமைக்கலாம்.
|