"மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து" (குறள்.
624)
என்றார் திருவள்ளுவர்.
காளை என்பது ஆண்மகன், கட்டிளமையோன்,
பாலை நிலத் தலைவன் ஆகிய மூவரையுங் குறிக்குமென்று
திவாகரம் கூறும். ஆதலால், காளையைக் குறிக்கும்
பாண்டி என்னும் சொல்லினின்றே, பாண்டியன்
என்னும் பெயர் தோன்றி யிருத்தல் வேண்டும்.
அருச்சுனன் திருநீராட்டிற்குத்
தென்னாடு வந்தபோது சித்திராங்கதன் என்னும்
பாண்டியன் மகளை மணந்தா னென்னும் கதைபற்றி,
பாண்டவன் என்னும் சொல்லினின்று பாண்டியன்
என்னும் பெயர் திரிந்ததென்று, வரலாற்றிற்
கெட்டாத தொன்மை வாய்ந்த பாண்டியன்
குடிப்பெயரைக் கி.மு. 10ஆம் நூற்றாண்டி னனான
பாண்டுவொடு தொடர்புபடுத்துவது, விண்ணக மீனையும்,
மண்ணக மானையும் ஒன்றா யிணைப்பது போன்றதே.
அருச்சுனன் பாண்டியன் மகளை மணக்கு முன்பே, அவன்
மாமன் பாண்டியன் எனப் பெயர் பெற்றிருந்தமையை,
அக் கதையே கூறுகின்றதே! இனி, ஐஞ்சிற்றசரர்
துணைக்கொண்டு பாண்டியன் ஆண்டதினாற் பெற்ற
பஞ்சவன் என்னும் பெயரும், பாண்டவரைக் குறிக்கும்
பஞ்சவர் என்பதனோடு தொடர்புடையதன்று.
பாண்டவரைக் குறிக்கும் சொல் என்றும் பன்மை
வடிவிலேயே நிற்கும். ஆகவே, அஞ்சவன் என்பதே
பஞ்சவன் என்று ஆரியரால் திரிக்கப்பட்டிருத்தல்
வேண்டும். பஞ்சவர் என்றும் ஐவரே. பஞ்சவனே
ஐவரோடு சேர்ந்த ஆறாமவன்.
பாண்டி என்னுஞ் சொல்லின்
வேர்ப்பொருள் வட்டம் என்பதே. வட்டம் என்பது
உருட்சியையும் திரட்சியையும் குறிக்கும். காளை
உருண்டு திரண்டிருப்பது. அது குண்டா யிருப்பதால்
குண்டை யென்றும், விடைத்திருப்பதால் விடை
யென்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க.
விடைத்தல் - பருத்தல்.
சோழன்
சோழநாடு நீர்வளத்திற்கும்
நெல்வளத்திற்கும் அன்றும் இன்றும் பெயர்
பெற்றது. புனல்நாடு, வளநாடு என்னும் நாட்டுப்
பெயர்களும், வளவன் என்னும் சோழன் குடிப்பெயரும்,
"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து -
பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர்
வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து"
|