மொழி வளர்ச்சியடைந்த
பிற்காலத்திலும், சொற்றொடர் களிலுள்ள எல்லா
இலக்கணக் கூறுகட்கும் ஒத்த பகுதிகள் உள்ளக்
கருத்திலில்லை. பாற்குடம் என்பதைப் பாலையுடைய
குடம் என விரிப்பர் இலக்கணியர். அவ்
விரிப்பிலுள்ள ஐகாரவேற்றுமை யுருபும்
உடையவென்னும் குறிப்புப் பெயரெச்சமும், உள்ளக்
கருத்திலில்லை. அதிலுள்ளவை யெல்லாம் பாலும்
அதைக் கொண்ட குடமுமே. இங்ஙனமே, வினைமுற்றிலுள்ள
அறுவகை யுறுப்புகளுள், முதனிலை யிடைநிலை
யிறுதிநிலைக்குரிய கருத்து களே உள்ளத்திலுண்டு.
அவையும் மொழியில் ஒருங்கே தோன்ற வில்லை.
முதலில் முதனிலையே இருதிணை ஐம்பால் மூவிடங்
கட்கும் உரிய எல்லா வினைவடிவிற்கும்
பொதுவாயிருந்தது; பின்பு பாலீறும் கால
விடைநிலையும் எச்சமுற்று வேறுபாடும் முறையே
தோன்றின. இவ் வுண்மையெல்லாம் தமிழ்போன்ற
இயன் மொழி வாயிலாகவே அறியமுடியும்; சமற்கிருதம்
போன்ற திரிமொழியை யும் செயற்கைமொழியையும்
அடிப்படையாய் வைத்தாராயின்,
ஐரோப்பியராயினும் அமெரிக்க ராயினும்
காரிருளிற் காட்டுவழிச் செல்வார்போல் ஒன்றுங்
கண்டறியார்.
சுட்டடிச்சொல்லாக்கம்
முச்சுட்டுகளுள், சேய்மைச்சுட்டினின்று
சேய்மைக் கருத்துத் தவிர வேறொன்றும் பிறத்தற்
கிடமில்லை; அண்மைச்சுட்டினின்று, அண்மை, பின்மை,
இழிகை முதலிய ஒருசில கருத்துகளே பிறக் கின்றன;
ஆயின், முன்மைச் சுட்டினின்றே, தோன்றல்
(முன்வருதல்), முன்மை, முற்செல்லல், நெருங்கல்,
பொருந்தல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய
எண்பெருங் கருத்துகளும், இவற்றிற்கு
இடைப்பட்டனவும் இவற்றிற் கிளைத்தனவுமான
எத்துணையோ நுண்கருத்துகளும் பிறக்கின்றன.
இவற்றையெல்லாம் என் ‘முதற்றாய் மொழி‘யுட்
கண்டுகொள்க. இங்கு எண்பெருங் கருத்துகளே
இன்றியமையாத அளவு விளக்கப்பெறும்.
தோன்றல் என்பது, தாயினின்று
குழவியும் மரத்தினின்று துளிரும் தோன்றுவதுபோன்ற
இயற்கைத் தோன்றலும்; வீட்டி னின்று மாந்தனும்
வளையினின்று எலியும் தோன்றுவது போன்ற
செயற்கைத் தோன்றலும், ஆக இருவகைப்படும்.
தோன்றுதல் முன் வருதலாதலின்,
தோன்றற்கருத்திலேயே தற்கிழமை பிறிதின்
கிழமை ஆகிய இருவகை முன்மைக் கருத்தும்
அடங்கியுள்ளன. முன்கிளை யும் முன்கையும் போன்றவை
தற்கிழமை முன்மை; முன் பொறையும் (முன்பாரமும்)
முன்தூதனும் போன்றவை பிறிதின்கிழமை முன்மை.
தோன்றியபின், உடனேயோ
காலஞ்சென்றோ, ஓர் இடம் நோக்கிச் செலவு அல்லது
பலதிசையும் படர்ச்சி ஏற்படுகின்றது.
|