பொருள்களையுமே சுட்டும்.
ஆதலால் உகரச்சுட்டு என்றும் முன்மைச்
சுட்டேயன்றி, சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்
பட்ட இடைமைச் சுட்டன்று. இது நீண்டகாலத்திற்கு
முன்பே தமிழ்நாட்டில் வழக்கற்றுப் போயிற்று.
ஆயின், யாழ்ப்பாணத்தில் ஓரளவு
வழக்கிலுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
உகரச் சுட்டடிச்சொற்கள்
உகரச்சுட்டுவேர் தனித்தும் க, ச, த, ந,
ப, ம என்னும் அறு மொழிமுத லெழுத்துகளோடு கூடியும்
வரும். ஞவயமெய்கள் உகரத்தோடுகூடி மொழிமுதல்
வராமையால், அவை பிறவுயிர் களோடு கூடி மொழிமுதல்
வரும் சொற்களிற் பெரும்பாலான, உகரச் சுட்டடிச்
சொற்களின் திரிபாகவே யிருக்கும். உயிருகரம்
முதலாக வருவது முதலடி; உயிர்மெய் யுகரம் முதலாக வருவது
வழியடி. சொல்லாக்கத்தில், பொருள்மயக்கத்தை
நீக்குதற்கு, உயிரும் மெய்யும் பல்வே
றெழுத்தாய்த் திரிகின்றன. அத் திரிபுகளெல்லாம்
சற்றுப் பின்னர்க் கூறப்படும். இங்கு,
உயிர்த்திரிபில் உ-இ, உ-ஒ என்பவற்றையும்,
மெய்த்திரிபில் ல்-ர், ல்-ள், ழ-க
என்பவற்றையும் உள்ளத்தில் இருத்துதல்வேண்டும்.
1. தோன்றுதல் (முன்வருதல்)
உ-உல்-உர்-உரு.
உரு: உருத்தல்
= தோன்றுதல். உரு-(அரு)-அரும்பு,
அரும்புதல் = தோன்றுதல். அருப்பம்
= தோன்றும் மீசை.
உரு = கரு. உரு = தோற்றம்,
வடிவம், நிறம்.
உரு - உருவு -உருவம். உருவு - உருபு =
வேற்றுமை வடிவம்.
குரு: குருத்தல்
= தோன்றுதல். குரு - குருத்து = தோன்றும் இளவோலை.
குருத்து-குருந்து =
வெண்குருத்து, குழந்தை. குருந்து-கருந்து= மரக்கன்று
(கோடை.). குரு-குரும்பை = தென்னை பனையின்
இளங்காய். குரு-குருகு = குருத்து, குட்டி,
குரு-கரு= 1.
சூல். "கருச்சிதைத் தோர்க்கும்"
(புறம். 34)
2. குழந்தை. "சேரர்தங்
கருவை" (பாரத.நிரை.116)
3. குட்டி. "காசறைக்
கருவும்" (சிலப்.
25:52)
4. பிறப்பு. "கருவைத்
துடைப்ப" (பிரபு.
கொக்கி. 15)
5. முட்டைக்கரு.
"புறவுக்கரு வன்ன"
(புறம். 34)
6. நிலத்தில் தோன்றும்
பொருள். "கருவென மொழிப"
(தொல். 964)
|