பக்கம் எண் :

முன்னுரை7

தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப "கடைச் சங்கமிருந்து தமிழா ராய்ந்தார்.... நாற்பத்தொன்பதின்மர் என்ப... அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப" என்று, இடை கடைக் கழகங்கள் போன்றே தலைக்கழகமும் தமிழாராய்ந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதால், தலைக் கழகத்திற்கு முன்பே தமிழிலக்கிய விலக்கணங்கள் பேரளவு தோன்றி யிருந்தமை பெறப்படும்.

(2) பஃறுளியாறு

பனிமலை (இமயம்) போலும் குமரி மாமலைத்தொடரில் தோன்றித் தலைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய (தென்) மதுரையைத் தன் கரையிற்கொண்டு, குமரிக்கண்டத் தென் கோடியடுத்த பழந்தென்பாண்டி நாட்டை வளம்படுத்திய, கங்கைபோலும் பேரியாறு பஃறுளியாம்.

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம். 9)

என்பது புறப்பாட்டு.

(3) குமரிமலை

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:17-22)

என்பது சிலப்பதிகாரம்.

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி" என்பதால், தலைக் கழகக் காலத்திலேயே ஒரு பாண்டியன் சாவம் (Java) என்னும் சாலித்தீவைத் தன்னடிப்படுத்தி, அவன் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பொறித்துவைத்தான் என்பதும்; "பஃறுளி யாற்றுடன் .....இமயமுங் கொண்டு" என்பதால் குமரிமலை பனிமலையும் பஃறுளியாறு கங்கையாறும் போன்றன என்பதும்; "வடதிசைக் கங்கையும் ... தென்னவன் வாழி" என்பதால் பிற்காலத் துப் பனிமலை கொண்ட கரிகாலச் சோழனும் கங்கைகொண்ட இராசேந்திரச் சோழனும் போன்று, முற்காலத்துப் பாண்டிய னொருவன் பனிமலையைக் குமரிமலைக் கீடாகக் கொண்டு நாவலந்தேய முழுதும் தன் ஆட்சியை நாட்டினான் என்பதும்