பக்கம் எண் :

இயனிலைப் படலம்71

மாந்தன் நாகரிகம் வளர வளரக் கருத்துகள் பல்குகின்றன. அடிப்படைக் கருத்துகளினின்று வேறுபட்ட கருத்துகள் கிளைக்கும் போது, முன்னவற்றைக் குறிக்கும் சொற்கள் பல்வேறு வகையில் திரிபடைகின்றன. அல்லாக்கால் பலபொருளொரு சொல்லும் (polysemy) பலசொல் லொருவடிவும்(homonymy) மிக்குப் பொருள் மயக்கு ஏற்படும். அதைத் தடுக்கச் சொல்வடிவை மாற்ற வேண்டி யுளது. சுள் என்னும் அடி பொருந்தற் பொருளிற் செள் என்று திரியாவிடின், சுடுதலையும் உறைத்தலையும் குறிக்குஞ் சொல்லொடு அதை மயக்க நேரும். செள் என்னும் வடிவினின்றே செண்டு, செண்டை, செடி, செண்ணு, செரு, செறு, செறி, செற்றை, செழி, சேர் முதலிய சொற்கள் பிறந்துள்ளன. நுள் என்பது நெருங் கற்பொருளில் நள் என்று திரியாவிடின், கிள்ளுதலைக் குறிக்கும் சொல்லொடு அதை மயக்க நேரும். மேலும், ஆயிரக்கணக்கான கருத்துகட்கு வெவ்வேறு சொல்லும் சொல்வடிவும் வேண்டியிருப்ப தால், வேர்ச்சொல்லும் அடிச்சொல்லும் பல்வேறு திரிபுகொண்டா லொழிய மொழி வளர்ச்சிக்கிடமில்லை.

(1) அறுவகைத் திரிபு

எ-டு: வலித்தல் : ஊங்கு-ஊக்கு, குண்டு-குண்டம்-குட்டம். நந்து-நத்தை, குறிஞ்சி-குறிச்சி.

மெலித்தல் : ஒப்பு-ஒம்பு, குத்து-குந்து, போக்கு - போங்கு.

நீட்டல் : உண்-ஊண், குட-குடா. நகரகம்-நாகரிகம்.

குறுக்கல் : ஆங்கு-அங்கு, தேவு-தெய்வம், வணங்கு- வாங்கு. வங்கு-வங்கி=வளைந்த கத்தி, நெளி வளையல்.

தொகுத்தல் : துருத்தி-துத்தி, பெட்டை-பெடை, வெய்ம்மை- வெம்மை, வேய்ந்தோன்- வேந்தன்.

விரித்தல் : பரவர்-பரதவர், மாடம்-மாடகம்.

(2) முக்குறை

முதற்குறை : சிப்பி-இப்பி, நீரம்-ஈரம், உகை-கை. கைத்தல்=செலுத்துதல்.

இடைக்குறை: கூண்டு-கூடு, முழுங்கு-முங்கு.

கடைக்குறை : சாய்-சா, நல்-ந.