பக்கம் எண் :

இயனிலைப் படலம்85

எ-டு: தமிழ்-சொல்+அழகு=சொல்லழகு, இன்+இசை= இன்னிசை

E. thin+er = thinner, sit+ing = sitting.

(8) போலி (Interchange of Letters)

ஒரு சொல்லில், ஓரிடத்தில், ஒரு தனியெழுத்திற்கு அல்லது இணையெழுத்திற்குப் பகரமாக(பதிலாக) முறையே மற்றொரு தனியெழுத்து அல்லது இணையெழுத்து வந்து, பொருள் மாறாதிருப்பது போலியாம். போலிருப்பது போலி. போலுதல்-ஒத்தல். இடம் நோக்கி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி எனப் போலி மூவகைப்படும்.

எ-டு: முதற்போலி : நாயிறு-ஞாயிறு, மடலி-வடலி.

இடைப்போலி : குடவன்-குசவன்-குயவன்,நெயவு- நெசவு,அரசு அரைசு, நீந்து-நீஞ்சு.

கடைப்போலி : கடம்-கடன், கூதல்-கூதர்.

பொருள் மாறாதிருக்கும் போலியால், செய்யுளில் எதுகை யமைப்பிற்கன்றி மொழிவளர்ச்சிக்கிடமில்லை. ஆயின், போலி முறையைத் தழுவிப் பொருள் வேறுபடும் சொற்கள் மொழியை மிக வளம்படுத்தும்.

எ-டு: தருக்கு-செருக்கு, பகு-வகு, மீறு-வீறு, கதலி-கசளி,குழல்-குடல் , பழம்-பயம்-பயன், வாயில்-வாசல், மொத்தை- மொச்சை, இடம் -இடன், நாளி-நாழி, நாளி-நாடி.

இலக்கணப்போலி (Metathesis)

ஒரு தனிச்சொல்லின் எழுத்துகளும் ஒரு கூட்டுச் சொல்லின் உறுப்புகள் அல்லது உறுப்புச்சொற்களும், முன் பின்னாக முறைமாறி வரின் இலக்கணப்போலி எனப்படும்.

எ-டு: தனிச்சொல் : அலரி-அரளி, கொப்புளம்- பொக்குளம், சதை-தசை, ஞிமிறு- மிஞிறு, விசிறி- சிவிறி.

கூட்டுச்சொல் : இல்வாய்-வாயில், இல்முன்று- முன்றில்- முற்றம், கதுவாலி- கவுதாரி, தானைமுன்-முன்றானை.

(9) மூவகைச் சொற்கிடக்கை

தனிச்சொல், கூட்டுச்சொல், தொடர்ச்சொல் எனச் சொற் கிடக்கை மூவகைப்படும். அவை முறையே ஒரு சொல்லும் இரு சொல்லும் இரண்டிற்கு மேற்பட்ட பல சொல்லுமாகும் .