மணலூர்
என்றும், பாரதம் கூறும். இதனால், பாண்டியர் குடியின்
தொன்மை முன்மையும் வைகை மதுரையின் பின்மையும்
அறியப் படும்.
பாரதக்காலத்தவரான வியாசர்
ஆரியவேதத்தை நாலாக வகுத்தார் என்னும்
செய்தியும், தொல்காப்பியத்திலுள்ள
பனைக்கொடிக் குறிப்பும், தொல்காப்பியர்
காலத்தை அறியப் பெரிதும் துணை செய்கின்றன.
பாரதப் போரிற் சோழபாண்டியர்
பாண்டவர்க்குத் துணை நின்று பொருததும்,
உதியஞ்சேரலாதன் என்னும் சேரவேந்தன் நடுநிலை
தாங்கி, இருபடைகட்கும் பதினெண் நாளும் சோறு
வழங்கிப் "பெருஞ்சோற்று" என்னும்
சிறப்படைமொழி பெற்றதும், மூவேந்தர்க்கும்
சிறந்த வரலாற்றுக் குறிப்பாவதுடன், தமிழரின்
போர்மறத்தையும் நாகரிகப் பண்பாட்டையும்
விளக்குவனவாகவும் உள்ளன.
10. தொல்காப்பியம் (தோரா. கி.மு. 7ஆம்
நூற்றாண்டு)
பாரதக் காலத்திற்குப்
பிற்பட்டவரும் ஐந்திர விலக்கணத்தை நன்கு
கற்றவரும் பாணினிக்கு முற்பட்டவருமான
தொல்காப்பியர், கி.மு. 7ஆம் நூற்றாண்டுபோல்,
சேரநாட்டின் தென்கோடியில் வாழ்ந்திருந்து,
தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றபின்,
பண்டாரகர் உ. வே. சாமிநாதையர்போற் பல
செந்தமிழ் முந்துநூல் கண்டு முறையாக ஆய்ந்து, தம்
பெயரால் தொல்காப்பியம் என ஒரு பிண்டநூலைத்
தொகுத்து, நிலந்தரு திருவின் பாண்டியன்
அவைக்களத்தில், (அக்காலத்துக் கழகமின்மையால்)
திருவதங்கோட்டில் நான்மறையில் முற்றத்
துறைபோயிருந்த ஓர் ஆரியத் தமிழ்ப்புலவர்
தலைமையில், அரங்கேற்றினார்.
தொல்காப்பியத்திற் பின்வருமாறு
சில குறைபாடுகள் உள்ளன.
(1) வேண்டாத ஆரியச்
சொல்லாட்சி
(2) தமிழுக்கு மாறான
ஆரியக் கருத்துகளைப் புகுத்தல்.
(3) தென்சொற்களை
வழுப்படப் புணர்த்தல்.
(4) சில இலக்கண
அமைதிகளைச் செவ்வையாய் விளக்காமை.
(5) தென்சொல் வளத்தை
அறியாமை.
(6) சில தென்சொற்களை
வடமொழிவடிவில் ஆளுதல்.
(7) எளிய சொற்களையும்
அருஞ்சொல்லாகக் காட்டுதல்.
இவற்றின் விரிவையும்
விளக்கத்தையும் என் "தொல்காப்பிய விளக்கம்"
என்னும் நூலிற் காண்க.
|