பாரதக் காலத்திற்கும்
தொல்காப்பியர் காலத்திற்கும் இடைப் பட்டே
மாபுராணம், பூதபுராணம் முதலிய தமிழ் இலக்கண
நூல்கள் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.
பாணினீயம் (கி. மு. 5ஆம் நூற்.)
ஐந்திரம் என்னும் வடமொழி
யிலக்கணத்தையும் தொல் காப்பியம் என்னும்
தமிழிலக்கணத்தையும் பெரிதும் துணைக் கொண்டு,
கி.மு. 5ஆம் நூற்றாண்டில், பாணினி என்னும் வடமொழி
யிலக்கணியர், எழுத்தும் சொல்லும்பற்றிய அஷ்டாத்யாயீ
என்னும் எண்ணதிகார வடமொழி யிலக்கணத்தை,
குன்றக்கூறல் மயங்க வைத்தல் என்னும் இருவகைக்
குற்றங்கள் நிரம்ப, அளவிறந்து சுருங்கக் கூறி
யியற்றி, தம் நூலைப் பெருமைப்படுத்துவதற்குச் சில
வலக்காரங்களையும் கையாண்டார்.
11. கடைக்கழகம் (கி.மு. 5ஆம் நூற். முதல் கி.பி.
4ஆம் நூற். வரை)
கி. மு. 5ஆம் நூற்றாண்டில், வைகைக்கரை
மதுரையில், கடைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
அதைப் புரந்த பாண்டியரும் அதன் இறுதியிலிருந்த
புலவரும் நாற்பத்தொன்பதின்மர் என்று, இறையனார்
அகப்பொருளுரை கூறும். ஆரியம் வர வர ஆழ வேரூன்றி,
மூவேந்தரும் ஆரியப் பித்தராக மாறி ஆரிய
வேள்விகளை இயற்றத் தலைப்பட்டுவிட்டதனால்,
பல்வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி
காலத்திலேயே கழகத்தைக் கலைக்க அடிகோலப்பட்டு,
அடுத்த தலைமுறைப் பாண்டியனாகிய உக்கிரப்
பெருவழுதி காலத்தில் ஆரியச்சூழ்ச்சி
நிறைவேறிவிட்டது.
கடைக்கழக இலக்கியம்
சிற்றிசை, பேரிசை, மதிவாணனார்
நாடகத் தமிழ்நூல், மணிமேகலை முதலிய தனிநூல்களும்,
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் ஆகிய
தொகைநூல்களும், கடைக்கழகத்தார் இயற்றின
வாகும்.
திருக்குறள் கடைக்கழக
உறுப்பினரல்லாத திருவள்ளுவரால் இயற்றப்பெற்றது.
அது ஆரிய ஏமாற்றைக் கண்டித்தலின், கடைக் கழக
ஒப்பம் பெற்றிலது.
திருக்குறளொழிந்த பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள், களவழி நாற்பது ஒன்றே
கடைக்கழகக் காலத்ததாகத் தெரிகின்றது; ஏனைய
வெல்லாம் பிந்தியவே.
|