பக்கம் எண் :

மறைநிலைப் படலம்115

மெய்கண்டான் நூலின் முதன்மையைப்பற்றி, ஏற்கெனவே மறைமலையடிகளும், கா. சுப்பிரமணியப் பிள்ளையும் வரைந் துள்ள குறிப்புகளைத் தழுவி, ம. பாலசுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ள "சிவஞான போதம் முழுமுதனூலே" என்னும் தலை சிறந்த மறுப்பு நூலைப் பார்க்க.

இனி, ஸ்ரீவல்லப என்னும் ஆரியரே திருவள்ளுவர் என்பது, முதனூலாசிரியன் மறைப்பாம்.

(7) தமிழ்த்தெய்வ மறைப்பு

முருகன், மாயோன் (திருமால்), காளி, வேந்தன், வாரணன், சாத்தன் என்னும் தமிழ்த்தெய்வங்கள், சுப்பிரமணியன், விஷ்ணு (கதிரவன்), துர்க்கை, இந்திரன், வருணன், சாத்தா என்னும் ஆரியத் தெய்வங்களே என்பது, தமிழ்த் தெய்வமறைப்பாம்.

(8) தமிழர் சமய மறைப்பு

இருவேறு தமிழச் சமயங்களாயிருந்த சிவநெறியையும் திருமால் நெறியையும் ஆரிய மதமாகிய பிரமநெறியோ டிணைத்து இந்து (ஹிந்து) மதம் எனப் பெயர் கொடுத்தும்; பிரமன், திருமால் (விஷ்ணு), சிவன் ஆகிய மூவரும் முறையே முத்தொழிலைச் செய்யும் முத்திருமேனியர் (திரிமூர்த்திகள்) என்று கூறியும்; முழுமுதற் கடவுள் யார் என்னும் வினாபற்றிச் சிவனெறியாரையும் திருமால் நெறி யாரையும் முட்டவைத்தது தமிழர் சமயமறைப்பாம்.

(9) தேவார மறைப்பு

சுந்தர மூர்த்தி நாயனார் காலத்திற்குப்பின், மூவர் தேவாரத்தையும் தொகுத்து அவை வழங்காதபடி தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குட் பூட்டிவைத்துச் சிதல் அரிக்கவிட்டதும், எஞ்சிய ஏடுகளையும் எவரும் எடுக்காதபடி இயன்றவரை தடுத்ததும், திருமுறைகண்ட புராணத்தால் தெரிந்துகொள்க.

(10) பொருளிலக்கண மறைப்பு

பொருளிலக்கணம் பாட்டியலே என்றும், அது பிறமொழி களிலும் உள்ளதே என்றும், கூறுவது பொருளிலக்கண மறைப்பாம்.

(11) தமிழ்ச்சொன் மறைப்பு

சென்னை பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில், ஆயிரக் கணக்கான தென்சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப் படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப்பதும், தமிழ்ச்சொன் மறைப்பாம்.